போயஸ் இல்லம் நினைவிடமாகுமா? எதிர்த்த வழக்கில் தீர்ப்பு!

Published On:

| By Balaji

வேதா நிலையத்தை நினைவிடமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்துவந்த போயஸ் கார்டன், வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. நினைவிடமாக்குவது தொடர்பாக கடந்த மே 22ஆம் தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை கலெக்டர் கட்டுப்பாட்டுக்குள் போயஸ் இல்லம் கொண்டு வரப்பட்டு வருவாய்த் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரி போயஸ் கார்டன் கஸ்தூரி எஸ்டேட் வீட்டு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றினால் அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்வார்கள். அது, போயஸ் கார்டனில் வசிப்பவர்களில் அமைதியான வாழ்க்கையை பாதிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்னிலையில் நேற்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பான உயர் நீதிமன்றக் கருத்தை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எந்த அவசரமும் காட்டவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், “போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான அசையும் சொத்துகளை கையகப்படுத்தவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. கையகப்படுத்தும் நடைமுறையில் இறுதி முடிவு எடுக்கவில்லை” என்ற வாதத்தை எடுத்துவைத்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மைதிலி, “இந்தப் பகுதியில் முறையான போக்குவரத்து தாக்க மதிப்பீடு மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டை நடத்தத் தவறிவிட்டனர். குடியிருப்பைக் கையகப்படுத்துவதிலும் சரியான நடைமுறையைத் தமிழக அரசு பின்பற்றவில்லை. சொத்தை நினைவுச் சின்னமாக மாற்றுவதில் எந்தவித பொதுநலனும் இல்லை” என்று வாதிட்டார்.

இதை நிராகரித்த நீதிபதி, வெறும் அச்சத்தின் அடிப்படையில் முன்கூட்டியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், “குடியிருப்பை நினைவுச் சின்னமாக மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்ற பல்வேறு தலைவர்களின் வீடுகளும் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது” என்றும் கருத்து தெரிவித்தார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share