ஜெயலலிதா பல்கலைக் கழக சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தைப் பிரித்து விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டது.
தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில் இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக் கோரியும் பதிவாளரை நியமிக்கக் கோரியும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, [தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2021/08/02/35/jayalaitha-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-case-high-court-order)
இவ்வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்த போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, “சமீபத்தில் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்குக் கல்லூரி இணைப்பு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்யவும் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறி அதுதொடர்பான அரசாணையைத் தாக்கல் செய்தார்.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டம் அமலில் உள்ளதால், அதைப் பின்பற்ற வேண்டும் என்றும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்” என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், ஜெ.ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அமைக்க வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்யப்போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டத்தை இயற்றச் சட்டப்பேரவைக்கு எந்த அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த சட்டத்தை ரத்து செய்யவும் முடியும். அதன் அடிப்படையில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெ.ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை உருவாக்கிய சட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.
ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ள போதும் அதுவரை அச்சட்டம் அமலில் இருக்கும் என்பதால் அச்சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். எனவே, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் விழுப்புரம் மையத்தின் மூலம் முதுநிலை மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட அதிகாரமில்லை. அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.
**-பிரியா**
�,