“வாக்கி டாக்கி போன்ற வழக்குகளில் ஜெயக்குமார் நிரந்தரமாக தண்ணீர் குடிக்க தயாராக வேண்டும்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
“திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தேவையில்லாமல் அதிமுக பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இதற்கு இன்று (ஜூலை 15) பதிலளித்திருக்கும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மிகக் கடுமையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அமைச்சர் ஜெயக்குமார் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு தெம்பில்லாமல் – திராணியில்லாமல், என்னுடைய கேள்விகளுக்கு தொடர்பில்லாமல் வாய்க்கு வந்தபடி அறிக்கை என்ற பெயரில் உளறிக் கொட்டியிருக்கிறார். ஜெயலலிதாவை விட, இன்றைக்கு அதிமுகவில் உள்ள ஜெயக்குமார் உள்ளிட்ட எந்தவொரு முன்னணித் தலைவர்களும் பெரிய அறிவாளிகள் இல்லை. அதைபோலத்தான், நங்கநல்லூர் வீடு கட்டும் கூட்டுறவு சங்கத் தலைவராக நான் இருந்தபோது, என்மீது எவ்வித கையாடல் வழக்கும் இல்லை. அப்படி இருந்திருந்தால், ஜெயலலிதா என்னை விட்டு வைத்திருப்பாரா? இந்த சராசரி அறிவுகூட ஜெயக்குமாருக்கு இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.
எடப்பாடி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. சார்பில் நான் தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதேபோல, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தேன் என்பதற்காக, என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு, கொடிய கொரோனா தொற்று தலைவிரித்தாடிய நேரத்தில், ஈவு இரக்கமின்றி, என்னை அதிகாலையில் கைது செய்து, என்னை எந்த சிறையில் அடைக்க வேண்டும் என்று முன்னரே முடிவெடுத்து, ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த பூந்தமல்லி சப்-ஜெயலில், தனிமையில் அடைத்து வைத்து, கொடுமைப்படுத்த வேண்டும் என்று ஜெயக்குமார் கும்பல் திட்டமிட்டது.
ஆனால், தி.மு.க.வின் பலம் வாய்ந்த சட்டத்துறை வழக்கறிஞர்களின் வாதத் திறமையால், ஒரு மணி நேரத்தில் நான் வெளியே வந்துவிட்டேன். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை, ரத்து செய்ய வேண்டும் என்று அரசின் பணத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடியது ஜெயக்குமார் கும்பல். ஆனால், அவை எல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டு, என்மீது போடப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது என்ற உண்மையை ஜெயக்குமார் தெரிந்துகொள்ள வேண்டும். உப்பை தின்ற ஜெயக்குமாரும், அவரது சகாக்களும்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏற்கெனவே ஒரு வழக்கில் ஓரளவுக்குத்தான் தண்ணீர் குடித்துவிட்டு வந்திருக்கிறார் ஜெயக்குமார். ஆனால், மிக விரைவில் வாக்கி டாக்கி போன்ற வழக்குகளில் நிரந்தரமாக தண்ணீர் குடித்திட ஜெயக்குமார் தயாராக இருக்க வேண்டும்” என தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார், ஆர்.எஸ்.பாரதி.
ஜெ.பிரகாஷ்