நாகர்கோவிலில் நாகராஜாதிடலில் நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்ற இளைஞனுக்கு தங்ககாசு என்று சொல்லி பித்தளை காசு கொடுத்த பெரியவர் யார் தெரியுமா என கூட்டத்தை பார்த்து கேள்வி எழுப்பினார்.
ஜனவரி 18 ஆம் தேதி மாலை நாகர்கோவில் நாகராஜா திடலில் திமுக பொதுக்கூட்டத்தில் கனிமொழி கலந்துகொண்டார். அதில் பேசிய கனிமொழி எம்பி,
“இந்த கூட்டம் நடக்கக் கூடாது என்று காவல்துறை அவர்களின் எஜமான் ஏவலை செயல்படுத்த முயன்றாலும். தி மு க என்னும் ஆற்றலாளர்கள் நடத்தும் கூட்டம் இது. நேற்று வரை விடாது பெய்த மழையால் குளம் போல் இருந்த இடத்தை திடலாக மாற்றியவர்களை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
தமிழ்நாட்டின் பெரிய மனிதரைப் பற்றி ஒரு கதை சொல்லப் போகிறேன். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளைப் பிடித்த ஒரு இளைஞருக்கு முதல்வர் தங்கக்காசு பரிசாகக் கொடுத்தார். அந்தப் பையனின் தந்தை அதை மறுநாள் கடைக்கு எடுத்துப் போயிருக்கிறார். சுரண்டிப் பார்த்துவிட்டு பித்தளை என்று சொல்லிவிட்டார்களாம். இதுதான் அந்த பெரிய மனிதரின் கதை.
கடந்த சட்டமன்றத் தேர்தல் அதன்பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் நூறு சதவீதம் வெற்றியை கொண்டாடிய நாம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், சட்டமன்ற தேர்தலில் மீண்டும் குமரியில் நாம் நூறு சதவீதம் வெற்றியை பெறவேண்டும்.
முன்னாள் மத்திய அமைச்சர் அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன் இதே திடலில் மூன்று முறை நடத்திய ஜூலை போராட்டத்தில் பாஜக ஆட்சி மத்தியில் அமைந்தால் இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வாங்கித் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.ஆனால் மத்திய ஆட்சியில் ஐந்து வருடங்கள் இணை அமைச்சராக இருந்தபோதும் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்போதும் மத்தியில் பாஜக ஆட்சி தான் இருக்கிறது.
அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன் ஜூலை போராட்ட சவாலை நிறைவேற்றிவிட்டு இடைத்தேர்தலில் போட்டியிடவேண்டும். ஜூலை போராட்டத்தை மத்திய பாஜக அரசு நிச்சயம் நிறைவேற்றாது. தமிழக மாணவர்களின் முன்னேற்றத்திற்கு எதிரானவர்கள் இன்றைய மத்திய ஆட்சியினர்”என்றார் கனிமொழி.
கனிமொழியின் ஆதரவாளரான மேற்கு மாவட்ட திமுக செயலாளரும்,பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மனோதங்கராஜ் நாகர்கோவில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
-தென்னவன்**�,