ஸ்ரீராம் சர்மா
‘ஜெய் பீம்’ என்றொரு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியான நாள் முதலாக திரும்பிய பக்கமெல்லாம் பஞ்ச காலத்துக் குழாயடி சண்டையாகக் கூச்சலோ கூச்சல்…
அந்தத் தலைப்பின் ஆதாரமான பொருள்தான் என்ன?
‘பீம்’ எனில் வடமொழியில் ‘ஒளிக்கீற்று’ எனப் பொருள்படும். ‘ஜெய்’ எனில் அதே வடமொழியில் ‘வாழிய’ எனப் பொருள் கொள்ளலாம். ஆக, ‘ஜெய் பீம்’ என்பதற்கான நேரிடைப் பொருளாக ‘வாழிய ஒளிக்கீற்று’ என்றே கொள்ள முடியும்.
இருளுக்குள் இருந்த வழக்கொன்றில் நியாயம் தேடி அலைந்த ஒடுக்கப்பட்ட அபலைப் பெண்ணொருவருக்கு – வக்கீல் ஒருவரின் முயற்சியால் வெளிப்பட்ட ஒளிக்கீற்று வென்றது என்பதை அதன் அர்த்தமாக்கிக் கொண்டால் பிரச்சினையே இல்லை.
ஆனால், அதற்கு ஒரு சாயம் பூசி, தயாரித்தவருக்கும் அதையே பூசி ஆளாளுக்கு அடித்தாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.
அந்தப் படத்தைத் தயாரித்து நடித்த சூர்யா என்பவர் ஏதோ தனக்கென அடையாளம் தேடி அலையும் புதுமுக நடிகர் அல்லர். தென்னிந்திய மொழித் திரையுலகில் அவருக்கென பரந்துபட்ட ரசிக மனங்கள் கோடிக்கணக்கில் உண்டு.
ஆயினும், ஜெய் பீம் என்னும் அந்த ஸ்கிரிப்டில், “எனக்கென சண்டைக் காட்சிகள் உண்டா, லவ் டூயட் உண்டா, பஞ்ச் டயலாக் உண்டா, எதிரியின் மார்பில் ஏறி அடிக்கும் காட்சி உண்டா…” எனும் வழக்கமான ஹீரோக்கள் கேட்கும் அபத்தக் கேள்விகள் ஏதொன்றும் கேட்காமல், இயக்குநர் ஒருவரை மட்டுமே நம்பி தன்னை முழுமையாக அர்ப்பணித்த அந்தக் கலையார்வலனை அடிபடு பொருளாக சகட்டு மேனிக்கு இழுத்தடித்துக் கொண்டிருப்பது நியாயமல்ல.
இதற்குண்டான விடிவுதான் என்ன என்பதை அலசுவதற்கு முன்பாக சிவகுமார் – சூர்யா சம்பந்தப்பட்ட எனது தனிப்பட்ட அனுபவத்தைச் சொல்லி விடுகிறேன்.
190 படங்களில் நடித்த நாடறிந்த நடிகர்தான் என்றாலும், அன்றைய திரையுலகில் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பிம்பங்கள் வாங்கிய சம்பளத்தை ஒப்பிட்டால் சிவகுமார் என்னும் நடிகர் வாங்கிய சம்பளம் அணில் வாலின் முனைக்கற்றை அளவே!
ஆயினும், அந்தப் பணத்தைக் கொண்டு தன்னை ஆளாக்கிவிட்ட நாடகத் துறைக்குச் செலவிட்டும், தேடி வந்தவருக்கெல்லாம் தன் தாயாரின் கைகளால் சோறள்ளிப் போட்டும், பள்ளிக்கல்வியில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்குப் பண உதவி செய்வதுமாக அள்ளிக் கொடுத்தவர் சிவகுமார்.
பரம்பரைப் பணத்தை பூதமாய் காத்தபடி அடுத்தவருக்குக் கிள்ளிக் கொடுக்க மனமின்றி வாய் ஜாலம் பேசித் திரிபவர்கள் நிறைந்த இந்த பாழ்த்த சமூகத்தில்…
மழலையிலேயே தந்தை கண் மறைய, தாயார் மடி கடந்து, வறுமையோடு போராடி, தான் சம்பாதித்த அருமை செல்வத்தை அடுத்தவருக்கும் கொடுக்கும் பெருத்த மனம் படைத்தவர் சிவகுமார். எனில், அவரது வாரிசுகளையும் அப்படித்தானே வளர்த்திருப்பார். அதனால்தானே பிறந்திருக்கக்கூடும் அகரம்!
சிவகுமார் என்னும் நடிகரோடு எனக்கு பரீட்சயம் கிடையாது. எனினும், எனது ம்யூஸிக்கல் தியேட்டரான “வேலு நாச்சியார்” படைப்பைக் கண்ட பிறகு அவர் என்னை அரவணைத்த பாங்கும் இன்றளவும் என்னிடம் அவர் பொழியும் அன்பும் அளவில்லாதது. அலாதியானது.
படித்தவர்கள், படைப்பாளிகள், உழைப்பாளிகள் என்றால் அவர்கள்பால் காமுற்று விடுபவர் சிவகுமார் சார். அவர்களை அவையத்துள் முன்னிறுத்தி பெருமைப்படுத்தும் அருங்குணத்தை தன்னியல்பாகக் கொண்டவர் சிவகுமார் சார்.
எழுத்தாளர் பிரபஞ்சனை கடைசிக் காலத்தில் அவர் அரவணைத்த பாங்கு பெரிது. அது, வெளியே தெரியாதது. அதுபோல் சத்தம் காட்டாமல் எத்தனையோ செய்திருக்கிறார். அப்படிப்பட்டவரின் குடும்பத்துக்கு காவல்போட வேண்டிய சூழலா? நாகரிக சமூகத்துக்கு அது கேவலம் அல்லவா? வெட்கம்… வெட்கம்.
ஏன் சூர்யாவை எதிர்க்கிறார்கள்? ஏன் இந்த தப்பிதமான கண்ணோட்டம்? அவர்கள் நினைப்பதுபோல சூர்யா திடீர் புரட்சிக்காரன் அல்லன்.
இளம் பிராயம் முதலே ஒடுக்கப்பட்டவர்களின் மேல் பரிவுகொண்ட மனிதன் என்பதைப் புரிந்துகொண்டு விட்டால் அவர்கள் கொண்ட பார்வை மாறிவிடும் என நம்புகிறேன்.
அதனால்தான் இதுகாறும் எவரிடமும், சிவகுமார் அவர்களிடமும்கூட பகிராத ஒன்றைப் பதிகிறேன்.
சூர்யா எனும் இன்றைய ஸ்டார் நடிகனுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு திருவல்லிக்கேணியில் எனது ‘டொக்கான’ அலுவலகம் ஒன்றில் நிகழ்ந்தது. அன்று அவர் இரண்டு படங்களை முடித்து நல்ல நடிகராகப் பரிணமித்திருந்த நேரம்.
ஒடுக்கப்பட்ட சேரி இளைஞன் ஒருவன் ஆன்மிகத்தின் உச்சத்தைத் தன்னியல்பாக அடைந்து புரட்சி செய்யும் ஸ்கிரிப்ட் ஒன்றைச் சொல்லச் சொல்ல நெகிழ்ந்து கேட்டவர். அதில் அவருக்கு ‘ஸ்கோப்’ இல்லை என்று தெரிந்த பின்பும் மானுடம் பழகியபடி தொடர்ந்து பேசினார்…
“ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்திப் பிடிக்கும் உங்கள் ஸ்கிரிப்ட் என்னை உலுக்கிவிட்டது. சன் டிவியோடு சேர்ந்து செய்தால் நல்ல ரீச் ஆகும். வாங்கண்ணா போவோம்…” என்றவர் தன் காரிலேயே என்னை ஏற்றிக்கொண்டு சன் டிவி தலைமையிடம் அழைத்துப் போனார்.
சில காரணங்களால் அந்த முயற்சி முழுமை பெறவில்லை எனினும், சூர்யா என்னும் மனிதனுக்கு ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்திப் பார்க்கும் நோக்கம் அன்றே இருந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவே இதைச் சொல்கிறேன்.
ஆம், தெரிந்து கொண்டுதான் சொல்கிறேன். சூர்யா என்பவன் சூதாடும் சினிமாக்காரன் அல்லன். சக மனிதனை மதிக்க தெரிந்த மானுடக் கலைஞன் அவன்.
அன்றந்த அகர மேடையில் அந்த புத்திசாலி ஏழைச் சிறுமி, “இங்க என்னை வந்தணைச்சுக்க என் தகப்பன் இல்லன்னாலும், எனக்கு அகரம் இருக்கு. அதுபோதும்…” எனப் பேசிய தருணத்தில் சபையென்றும் பாராமல் உடைந்து அழுத பாசக்காரன் சூர்யா.
அப்படிப்பட்ட வெள்ளந்தி மனிதனைத்தான் எட்டி உதைக்க சொல்கிறார்கள். ஒருமையும், சிறுமையுமாக ஏதேதோ எழுதித் தாக்குகிறார்கள்.
வல்லாடிப் பேச வார்த்தை எழுந்தாலும், விவரமற்றவர்களின் நொய்யாட்டத்துக்கு நெய் ஊற்றி விடக் கூடாது என்பதால் நிற்கிறேன்.
நண்பர்களே, கொஞ்சம் கவனியுங்கள். திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சி. அதில், ஒரு மனிதனை மட்டுமே குறிவைத்து தாக்குவோம் என்பது தவறு.
வன்முறை என்பது வழிமுறை ஆகாது. அது ஒருவழிப் பாதையும் கிடையாது. அப்படிப்பட்டதொன்றை இந்த மண் ஏற்காது.
புரிந்துகொள்ளுங்கள். அரசியல் என்பது வேறு. சினிமா என்பது வேறு. அரசியல் என்பது அதன் வழி நின்றால் சினிமா எப்படி சீண்டிவிட முடியும்? போதும் பொல்லாப்பு.
திரையுலகமும் ஒன்றைக் குறித்துக்கொண்டாக வேண்டும்.
கொரோனா பெருந்தொற்றின் பதற்றத்தால் மொத்த மனித இனமும் உள்ளழுந்திப் போயிருக்கும் காலமிது. மெல்ல மெல்ல முன்னேறி வாழ்வை நிலைநிறுத்த முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.
மனித மனங்களை இலகுவாக்க வேண்டிய கடமை தமிழ் கலையுலகுக்கும் உண்டு. கொரோனா லாக் டவுனில் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்ட படங்கள் மலையாளப் படங்கள்தாம். காரணம், அதன் எளிமையும் உண்மையும் நேர்த்தியும்தான்.
லாக் டவுனில் ஆர அமர உலக சினிமாக்களை கண்டுவிட்ட ரசிக மனம் பல மடங்கு தெளிவடைந்து விட்டது. ஆட்டம்பாட்டம் கடந்த நெகிழ்வான ‘கன்டென்ட்’ ஒன்றை அது எதிர்பார்க்கிறது.
எழுத்தாளர்களுக்கான கடும் பஞ்சத்தில் தமிழ்த்திரை உலகம் தள்ளாடுகிறது என்னும் குற்றச்சாட்டு தேசிய அளவில் உண்டு.
தமிழ்த் திரைப்படம் என்றால் அது ‘ஷாக்கிங் வேல்யூ’ கொண்ட கதையம்சத்தை மட்டுமே வெளிப்படுத்தி கல்லாகட்டப் பார்க்கும் எனும் அவப்பெயரை இனியும் அனுமதிக்கக் கூடாது.
சமூக அவலங்களைப் படமாக்குவதில் தவறில்லை. அது, பத்தில் ஒன்றாகவோ இரண்டாகவோ இருந்துவிட்டால் பழுதில்லை.
பேசப்படும் தமிழ்ப் படங்கள் அனைத்தும் சாதியை மையமாக வைத்தே இருப்பது தமிழ்த் திரையுலகத்துக்குப் பெருமை சேர்க்காது.
திரைப்படுத்த வேண்டிய ஈரமான – இதமான கதைகள் ஏராளம் உண்டு இந்த மண்ணில். அதில் கவனம் செலுத்துங்கள்.
கடந்தவை கடந்தவையாகப் போய் தொலையட்டும்.
புகழார்ந்த தமிழ் மண்ணில் கலைமகள் இளைப்பாறட்டும்!
**கட்டுரையாளர் குறிப்பு**
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
�,”