ஜெய்பீமுக்கு எந்த விருதும் தரக்கூடாது: வன்னியர் சங்கம்!

Published On:

| By Balaji

வட கிழக்கு பருவ மழை விடாது பெய்து வருவதுபோல், நவம்பர் 2ஆம் தேதி வெளியான ஜெய்பீம் படத்துக்கான வரவேற்பும், சர்ச்சைகளும் தொடர்ந்து வருகின்றன.

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற அக்னிகுண்டம் காலண்டர் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் மற்றும் வன்னியர் சங்க அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

அதுபோன்று படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் வலியுறுத்தின.

சர்ச்சைக்குள்ளான அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்ட போதிலும் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி சார்பில் வழக்கறிஞர் பாலு மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் ஒளிபரப்பு துறை கீழ் செயல்பட்டு வரும் திரைப்பட விழா நடத்துவதற்கான இயக்குநருக்கும், தமிழக தகவல் மற்றும் பொது விவகாரத்துறை செயலாளருக்கும் கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதில், “வன்னியர் சங்கம் தமிழ்நாடு, ஆந்திரா, புதுவை உட்பட நாடு முழுவதும் உள்ள வன்னியச் சமூக மக்களின் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. அக்னிகுண்டம் என்பது வன்னியர்களின் புனித சின்னமாகப் பல நூற்றாண்டுகளாக உள்ளது. வன்னியர் சமூகத்தினர் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் ஜெய்பீம் படத்தில் மனித உரிமை மீறலில் ஈடுபடும் காவல் உதவி ஆய்வாளரின் வீட்டில், அக்னிகுண்டம் அச்சிடப்பட்ட காலண்டர் இடம் பெற்றிருக்கிறது. அதுபோன்ற அந்த காவல் உதவி ஆய்வாளரின் பெயர் குரு என வைக்கப்பட் டுள்ளது. இது வன்னியர் சங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரின் பெயர் ஆகும்.

இந்த நிலையில் ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தினர் தவறான செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் வேண்டுமென்றே வன்னியச் சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்டது போல் தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வன்னியர் சங்கத்தினர் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர உள்ளனர். எனவே ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டவோ, அங்கீகரிக்கவோ, தேசிய விருது போன்ற விருதை வழங்கக் கூடாது என்று வன்னியர் சங்கம் சார்பாகக் கோரிக்கை வைக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share