{போலீசாரின் ஷூவைத் துடைத்து முத்தமிட்ட எம்.பி!

Published On:

| By Balaji

ஆந்திராவில் முன்னாள் எம்.பி ஒருவரின் சர்ச்சை பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி ஒருவர் போலீஸ் ஷூவைச் சுத்தம் செய்து முத்தமிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அக்கட்சியின் முன்னாள் எம்.பி திவாகர் ரெட்டி, காவல் துறையைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். “தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் போலீசாரை தனது ஷூவை துடைப்பதற்காக வைத்துக்கொள்வேன். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் காவல் துறையினர் பொய்யான வழக்குகளை போட்டு, எங்கள் கட்சியினரைத் துன்புறுத்தி வருகின்றனர்” என்று பேசியுள்ளார்.

இதற்கு அனந்தபூர் மாவட்ட காவல் துறை சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். “திவாகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையில் அவருடைய பேச்சுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி கொரண்ட்ல மாதவ் கண்டனம் தெரிவித்ததுடன், பணியிலிருந்தபோது உயிர்த் தியாகம் செய்த ஒரு காவல் துறை அதிகாரியின் ஷூவை எடுத்து வந்து சுத்தம் செய்து முத்தமிட்டுள்ளார். இது அங்கு கூடியிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனந்தபூரில் தனது கடமையைச் செய்யும்போது உயிரைத் தியாகம் செய்த ஒரு போலீஸ்காரரின் காலணிகளை நான் சுத்தம் செய்து முத்தமிட்டேன். மக்களின் உயிரைக் காப்பாற்றும் செயலிலும், நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் செயலிலும் ஈடுபடும்போது போலீசார் தங்களது உயிரைத் தியாகம் செய்ய நேரிடுகிறது. ஆனால் திவாகர் ரெட்டி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்பே போலீசார் குறித்து இதுபோன்று அவதூறாகப் பேசுகிறார். ஆனால், சந்திரபாபு நாயுடு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், “கட்சித் தலைமை அனுமதித்தால் எம்.பி பதவியில் இருந்து ராஜினாமா செய்து மீண்டும் காவல் துறையில் இணைந்து தெலுங்கு தேசம் கட்சிக்குத் தகுந்த பாடம் கற்றுக்கொடுப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கொரண்ட்ல மாதவ், தனது இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்து இந்துபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திவாகர் ரெட்டி, வாய் தவறி அவ்வாறு தவறுதலாகப் பேசிவிட்டதாகவும், தனது கருத்துகளை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள எதுவும் இல்லை என்றும் கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share