விவசாய சட்டங்களை நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்படும் வரையில் விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது ஒன்றிய அரசு. இது விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதிக்கும் வகையில் இருப்பதாக நாடு முழுவதிலும் இருந்து பாஜகவினரைத் தவிர அனைத்து தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
குறிப்பாக நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதே நவம்பரில் தான் கடந்த ஆண்டு ஒன்றிய அரசுக்கும், வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பாதிப்பு, மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடத்தி வந்த விவசாயிகளின் போராட்டம் தொடங்கி வரும் 26ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது.
இதனிடையே விவசாயிகளுடன் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எதற்கும் பலன் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றமும் காலவரையறையின்றி சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தியது. ஆனால் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
இதில் ஏராளமான விவசாயிகள் போராட்டக் களத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 750 பேர் வரை உயிரிழந்ததாக விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயிட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி இன்று காலை அறிவித்தார். இதனையொட்டி நாடு முழுவதும் விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச்சூழலில் டெல்லியில் நடந்துவரும் போராட்டம் திரும்பப்பெறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட மாட்டாது. நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காகக் காத்திருப்போம் என்றும் விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயிட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விவசாயிகளின் பிற பிரச்சினைகளையும் அரசு விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
**-பிரியா**
�,