jஸ்டெர்லைட்: அரசுகளுக்கிடையே முரண்பாடு!

Published On:

| By Balaji

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். அதனால், ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரித்து அதை இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று(ஏப்ரல் 22) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு காணொலி மூலம் விசாரித்தது. கொரோனா பரவலின் தற்போதைய நிலை, தேசிய நெருக்கடி போல் உள்ளது என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், துஷார் மேத்தா , ”நாட்டில் ஆக்சிஜனுக்கு மிக அவசர, அவசிய தேவை இருக்கிறது. அதனால், சுகாதாரப் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தயாரிக்க மட்டும் அனுமதி வழங்கலாம்” என தெரிவித்தார்.

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, ” ஸ்டெர்லைட் ஆலையின் மீது தமிழக அரசுக்கு நம்பிக்கை இல்லை என்றும் ஏற்கனவே பல்வேறு விதிமுறைகளை மீறியதால் மூடப்பட்ட ஆலை எந்த வகையிலும் திறக்க அனுமதி கொடுக்கக் கூடாது” என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே மற்றொரு வழக்கு விசாரணையில், ஆக்சிஜன் விநியோகம், அத்தியாவசிய மருந்துகள் விநியோகம், தடுப்பூசி போடும் முறை உள்ளிட்ட 4 அம்சங்களில் தேசிய திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதுகுறித்து மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share