கேரள மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது, பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- ஐ.யு.எம்.எல். கட்சி இடம்பெற்றுள்ளது. மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 91 இடங்களில் போட்டியிடுகிறது. மற்ற இடங்களில் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் முஸ்லிம் லீக் கட்சிக்கு இந்த முறை 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இத்துடன், மலப்புரம் மக்களவை இடைத்தேர்தலிலும் இந்தக் கட்சி போட்டியிடுகிறது. மாநில அரசியலுக்காக இத்தொகுதியின் எம்.பி.ஆக இருந்த மூத்த தலைவர் குஞ்ஞாலிக்குட்டி அண்மையில் பதவிவிலகினார். அந்த காலியிடத்துக்குதான் இப்போது இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அவருக்குப் பதிலாக அப்துல் சமது சமாதனி நிறுத்தப்படுகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல இந்தக் கட்சியிலும் ஒருவரே வகைதொகையில்லாமல் போட்டியிடுவதைத் தடுக்கும் கட்டுப்பாடு உண்டு. அதிகபட்சம் ஒருவர் மூன்று முறைக்கு மேல் போட்டியிடமுடியாது என்பது இந்தக் கட்சியின் விதி. ஆனால், கட்சியின் முக்கிய தலைவர்கள் எம்.கே.முனீர், பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, கே.பி.ஏ.மஜீத் ஆகிய மூன்று பேருக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை வேட்பாளர் பட்டியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் அம்சம், நூர்பினா ரசீத் எனும் பெண் வேட்பாளரின் போட்டிதான். தெற்கு கோழிக்கோடு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள இவர், இந்தக் கட்சியின் சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சியின் இரண்டாவது பெண் வேட்பாளர் ஆவார்.
1996ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் பெண் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது, மு.லீக். அதே ஆண்டில் இதே தொகுதியில் கமருன்னிசா என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.
**-இளமுருகு **
�,