oபிரியங்காவுடன் மோதும் நிர்மலா சீதாராமன்

Published On:

| By Balaji

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பிரியங்கா காந்திக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரத்திற்கு வழியின்றி லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே திரும்பி வருகின்றனர். அவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், உத்தர பிரதேசத்திலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 1,000 பேருந்துகள் ஏற்பாடு செய்வதாக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு உத்தர பிரதேச பாஜக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளின் விவரங்களைத் தருமாறு அரசு கேட்டது. இதுதொடர்பான விவரங்கள் அரசிடம் அளிக்கப்பட்ட நிலையில், பேருந்துகளுக்கு பதிலாக ஆட்டோக்கள், கார்கள், டூ வீலர்களின் பதிவு எண்களை காங்கிரஸ் கட்சி அளித்ததாக பிரியங்கா காந்தியின் தனிச் செயலாளர் சந்தீப் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லாலு ஆகியோர் மீது யோகி ஆதித்யநாத் அரசு வழக்குப் பதிவு செய்தது. அத்துடன் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற பேருந்துகளையும் மாநில எல்லையில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதுதொடர்பாக காணொலி காட்சி மூலம் இன்று (மே 20) செய்தியாளர்களை சந்தித்த அவர், “காங்கிரஸ் சார்பில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளுக்கு உத்தர பிரதேச அரசும், யோகி ஆதித்யநாத்தும் அனுமதி அளிக்கவில்லை. உரிய நேரத்தில் அனுமதி வழங்கியிருந்தால் இந்நேரம் 72 ஆயிரம் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியிருப்பார்கள். அனுமதி கிடைக்காமல் அந்த பேருந்துகள் தற்போது ராஜஸ்தான், உத்தர பிரதேச எல்லைகளில் நிற்கின்றன” என்று சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் முதுகெலும்பு என்று குறிப்பிட்ட பிரியங்கா, “இது அரசியல் செய்வதற்கான நேரமல்ல. நாம் நமது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். நாடு அவர்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் இயங்குகிறது. இதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “இது அரசியலுக்கான நேரம் இல்லை. நீங்கள் பேருந்துகளில் பாஜக கட்சி கொடிகள் மற்றும் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்த விரும்பினால் அதைச் செய்யுங்கள். உங்களால்தான் அந்த பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன என்று சொல்ல விரும்பினாலும், அதைச் செய்யுங்கள். ஆனால் பேருந்துகள் இயக்கட்டும்” என்று யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பிரியங்கா காந்தி உத்தர பிரதேச அரசின் மீது உண்மையிலேயே கவனம் செலுத்துகிறார். ஆனால், உத்தர பிரதேசத்திற்கு 300 ரயில்கள் ஏன் வந்தன என்பதை அவர் பார்க்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துச் செல்லவே அது ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவே, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கருக்கு 7-8 ரயில்கள் கூட வரவில்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும், “உத்தர பிரதேசத்தின் மக்கள் தொகையும் சத்தீஸ்கரின் மக்கள் தொகையும் ஒப்பிடத்தக்கது என்று நான் கூறவில்லை. ஆனால், ஜார்க்கண்ட்-சத்தீஸ்கர் மாநிலங்களிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையும், உத்தர பிரதேசத்திலுள்ள எண்ணிக்கையும் ஒன்று. இதிலிருந்தே காங்கிரஸின் பாசாங்குத்தனம் தெளிவாகத் தெரிகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயம் என்பதால் இதனை அரசியலாக்க விரும்பவில்லை. இந்த அசாதாரண சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று சாடினார்.

ஏற்கனவே ராகுல் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “அவர்களின் பைகளை தூக்கிகொண்டு வீடு வரை சென்று விட்டு வர வேண்டியதுதானே” என்று சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தது கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்த நிலையில் பிரியங்கா காந்தி மீது நிர்மலா சீதாராமன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share