மாநில அரசுகளை மத்திய அரசு பிச்சைக்காரர்கள் போல ஆக்கிவிட்டதாகவும், கொரோனா வைரஸ் தொற்று கால பொருளாதாரத் தொகுப்பு என்று சொல்லி 20 லட்சம் கோடி ரூபாய் அறிவித்தத்தில் மத்திய அரசு தனது கௌரவத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டதாகவும் தெலங்கானா மாநில முதல்வர் கே.சி. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய தெலங்கானா முதல்வர், “மாநிலங்கள் கடன் வாங்கும் சதவிகிதத்தை அதிகரிப்பதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, அதற்கு பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது மத்திய அரசு. இது முழுக்க முழுக்க நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல். மத்திய அரசு எண்களில் ஏமாற்று வித்தை நடத்துகிறது.
20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு மூலமாக மத்திய நிதியமைச்சரின் நோக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதா அல்லது பிரதமர் அறிவித்த தொகைக்கு கணக்கு காட்டுவதா என்று சர்வதேச பத்திரிகைகள் விமர்சித்திருக்கிறார்கள்” என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இது மிகவும் கொடூரமான தொகுப்பு. இது ஒரு நிலப்பிரபுத்துவ கொள்கை மற்றும் சர்வாதிகார அணுகுமுறையில் உள்ளது. இதை நாங்கள் முழுமையாக கண்டிக்கிறோம். இது நாங்கள் கேட்டதல்ல. கொரோனா வைரஸால் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு உதவக் கூடிய திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்த முனைந்தோம். ஆனால் மாநில அரசுகளின் நிதி முடங்கியிருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசிடம் உதவிகள் கேட்டபோது பிச்சைக்காரர்கள் போன்று மாநிலங்களை நீங்கள் நடத்துகிறீர்கள். இந்தியாவில் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது இதுதானா? இதை ஒரு தொகுப்பு என்று அழைக்க முடியாது. மிகவும் மன்னிக்கவும். இது ஒரு கூட்டாட்சி அமைப்பில் பின்பற்றப்பட வேண்டிய கொள்கையே அல்ல. மத்திய அரசு இப்படி செயல்பட்டால் பின்னர் மாநில அரசுகள் எதற்காக?” என்று கேள்வி எழுப்பினார் சந்திரசேகர ராவ்.
“பிரதமர் மோடி கூட்டுறவான கூட்டாட்சி என்று சொல்லி வருகிறார். ஆனால் இது முற்றிலும் வெற்றானது போலியானது என்பதை இந்த தொகுப்பு நிரூபித்துள்ளது” என்று மே 17 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது கொதித்திருக்கிறார் தெலங்கானா மாநில முதல்வர்.
மத்திய அரசின் 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத் தொகுப்புக்கு ஒரு மாநில அரசிடம் இருந்து வெளிப்பட்டிருக்கும் மிகக் கடுமையான விமர்சனமாக இது பார்க்கப்படுகிறது.
**-வேந்தன்**�,”