எம்ஜிஎம் குழுமத்திற்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்ஜிஎம் குரூப் என்பது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களின் குழுமமாகும். தீம் பார்க், ஹோட்டல், ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் மதுபான ஆலைகள் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் எம்ஜிஎம் குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, விழுப்புரம், திருநெல்வேலி, பெங்களூரு என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
எம்ஜிஎம் குழுமத்தின் தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டை அலுவலகத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலையிலேயே வருகை தந்தனர். அங்கு அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அங்கிருந்த காவலர் ஊழியர்களின் அக்சஸ் கார்டை வைத்து மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று கூறியுள்ளார். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து ஊழியர்கள் வந்த பின்னே அதிகாரிகள் அங்குச் சோதனையில் ஈடுபட்டனர்.
அதே சமயத்தில் ராயப்பேட்டையில் உள்ள மற்றொரு அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபான தொழிற்சாலைக்கு நான்கு கார்களில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்தனர். ஆலைக்குள் சென்ற அவர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் இருந்த செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்று 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் நட்சத்திர ஹோட்டல் வாங்கியதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ரெய்டு நடந்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**