dஅரசுத் துறையின் இயக்குநர் அலுவலகங்களைத் திருச்சிக்கு மாற்றலாம் என்று மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தந்தை பெரியார், எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவு தினம் நேற்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்பட்ட நிலையில், திருச்சியில் இருவரது சிலைகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமைச்சர்கள், தற்போது நடப்பது அதிமுக ஆட்சி, அதிமுகவுக்கு வாக்களித்தால்தான் நலத் திட்டங்கள் கிடைக்கும் எனப் பேசி வருகின்றனர். அவர்களது ஆட்சி இன்னும் ஓராண்டு தான் இருக்கும். அதன்பின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக ஆட்சியைப் பிடிக்கும். இதனை எண்ணி மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
திருச்சியைத் தலைநகராக்கும் எம்.ஜி.ஆரின் கனவு குறித்த கேள்விக்கு, “விருப்பத்தின் அடிப்படையில் அதுகுறித்த அறிவிப்பை எம்.ஜி.ஆர் வெளியிட்டார். திருச்சியைத் தலைநகராக மாற்றவில்லை என்றாலும்கூட, ஒவ்வொரு துறையினுடைய இயக்குநர் அலுவலகங்களையும் திருச்சிக்கு மாற்றலாம் என்பது எனது யோசனை. இதுபோன்ற பணிகளைத் தமிழகத்தின் இதயம்போன்ற மையப்பகுதியாக இருக்கும் திருச்சிக்கு மாற்றினால் பொதுமக்களுக்குப் பயனாக இருக்கும். மேலும், திருச்சியில் இடவசதிகளும் அதிகமாக உள்ளன” என்று கோரிக்கை வைத்தார்.�,