வைபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப்பில், “இன்றைய அதிமுக நிலவரம் என்ன?”என்று ஸ்மைலி களோடு கேள்வி வந்திருந்தது.
அதற்கு பதிலாக ஒரு ஸ்மைலியை அனுப்பிவிட்டு விளக்கமான மெசேஜை டைப் செய்ய தொடங்கியது ஃபேஸ்புக் மெசஞ்சர்.
“அதிமுகவில் சசிகலாவை சந்தித்தவர்களை நீக்கும் படலம் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கி இருக்கிறது. பிப்ரவரி 24ஆம் தேதி சசிகலாவை சந்தித்த விழுப்புரம் ,திண்டிவனம் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். அடுத்து மார்ச் 4 ஆம் தேதி திருச்செந்தூரில் சசிகலாவை சந்தித்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பியான ஓ. ராஜா உள்ளிட்ட தேனி மாவட்ட நிர்வாகிகளும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பல்வேறு நிர்வாகிகள் தேனி மாவட்டத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்கள்.
இவ்வளவுக்குப் பிறகும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பன்னீர்செல்வத்திடம் இருந்து எந்த ரியாக்சனும் இல்லை. மேலும் இந்த நீக்க அறிவிப்புகளில் அவரது கையெழுத்தும் இடம்பெற்றுதான்
வெளியாகியிருக்கின்றன.
உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது கூட ஒருவகையில் சரிதான். ஆனால் சசிகலாவை சந்தித்த பன்னீர்செல்வத்தின் தம்பி வரையில் நீக்கப்பட்டு விட்ட நிலையில், பன்னீரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.
கைலாசபட்டி பண்ணை வீட்டில் தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்த மார்ச் 2-ஆம் தேதிக்குப் பிறகு பல்வேறு மாவட்ட செயலாளர்கள் குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களாவது தன்னை வந்து சந்திப்பார்கள் என ஓபிஎஸ் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் எடப்பாடியின் தூதுவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தவிர வேறெந்த தென் மாவட்ட, மாவட்ட செயலாளரும் பன்னீரை சென்று சந்திக்க வில்லை. இதுவே பன்னீரின் அமைதிக்கு காரணமாக இருக்கிறது.
பன்னீரின் தம்பி நீக்கப்பட்டது குறித்து கூட அதிமுகவில் யாரும் எந்த சலசலப்பையும் எழுப்பவில்லை என்பதிலிருந்தே பன்னீரின் செல்வாக்கு கட்சியில் எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரிகிறது.
இதுகுறித்து அதிமுகவின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களிடம் விசாரித்தபோது… ‘தனது பதவிக்காக பன்னீர் காட்டும் அக்கறையை கட்சிப் பணிகளிலும் தேர்தல் பணிகளிலும் அவர் காட்டவில்லை என்பதே உண்மை. முதல்வர் வேட்பாளர் தேர்வின் போதும் தேர்தலுக்குப் பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேர்வின் போதும் அவர் காட்டிய ஆவேசங்களை தேர்தலில் காட்டவில்லை.
சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற ஆட்சி அமைத்த நிலையில் அமைச்சர் பதவி ஏற்ற செந்தில்பாலாஜி, தனக்கு நெருக்கமான அதிமுக பிரமுகர்களிடம் சில விஷயங்களை மனம் விட்டுப் பேசி இருக்கிறார்.
அப்போது அவர், ‘திமுகவை ஆட்சியில் அமர வைத்ததற்கு பன்னீர்செல்வத்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மேற்கு தமிழகத்தில் அதிமுக பெரிய வெற்றி பெற்ற நிலையில்… தென்தமிழகத்தில் 51 தொகுதிகளில் 36 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. 15 தொகுதிகளில் தான் அதிமுக வெற்றி பெற்றது’ என்று அப்போதே செந்தில் பாலாஜி பேசும்போது குறிப்பிட்டார்.
ஒருவேளை மேற்கு பகுதியை போல தெற்கிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்தால் திமுகவுக்கு சுமார் 20 இடங்கள் வரை குறைந்து இருக்கும். இப்போது திமுக மட்டும் தனியாக 125 இடங்கள் வெற்றி பெற்றுள்ளது. தென் மாவட்டங்களில் அதிமுக தன் பலத்தை நிரூபித்து இருந்தால் திமுகவுக்கு 110 முதல் 115 இடங்கள் வரைதான் கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு. திமுக தனியாக ஆட்சி அமைத்திருக்க முடியாது. தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையே மாறி போயிருக்கும்.
தென்மாவட்டங்களில் தான் செலவு செய்வதாக ஒப்புக்கொண்ட பெரும் தொகையை ஓ. பன்னீர்செல்வம் செலவு செய்யவில்லை. மேலும் தலைமையிடம் இருந்து செலவு செய்வதற்காக தரப்பட்ட பணத்தையும் அவர் ஒழுங்காக வேட்பாளர்களிடம் கொண்டுபோய் சேர்க்கவில்லை. ஒருவேளை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி விடுமென்று கூட அவர் நினைத்திருக்கலாம்.
பிரச்சனை இதுதான். ஆனால் சசிகலாவை சேர்க்காததால் தான் தென் மாவட்டங்களில் வெற்றி பெறவில்லை என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி தன் மீதான புகார்களை மறைக்க பார்த்துவிட்டார் பன்னீர்செல்வம்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களில் தென் மாவட்டங்களில் தோல்வியுற்ற வேட்பாளர்களும் அதிமுக மாவட்ட செயலாளர்களும் இந்த விவகாரம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டனர். அதனால் தான் பன்னீர்செல்வத்தை நோக்கி படையெடுக்க யாரும் விரும்பவில்லை. உதயகுமார் கூட எடப்பாடி பழனிச்சாமி சொன்னதின் பேரிலேயே பன்னீரை சென்று சந்தித்தார். இல்லையென்றால் அவரும் போய் சந்தித்து இருக்க மாட்டார்.
தனது குறுகிய அரசியல் அபிலாசைகளுக்காக திமுக ஆட்சி அமைக்க காரணமாக இருந்தவர் பன்னீர்செல்வம் என்பதே தென் மாவட்ட அதிமுக செயலாளர்களின் எண்ணமாக இருப்பதால்தான் அவரை சென்று சந்திக்க யாரும் தற்போது விரும்பவில்லை” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்தது மெசஞ்சர்.
அதைப் படித்த வாட்ஸ் அப், “இதுபற்றியெல்லாம் தெரிந்ததால்தான் ஓ. பன்னீர்செல்வம் எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கைலாசபட்டி பண்ணை வீட்டில் கைபிசைந்து கொண்டிருக்கிறாரா?”என்று ரிப்ளை செய்துவிட்டு ஆஃப்லைன் சென்றது.