தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை, முறையாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை அருகே உள்ள திருக்காட்டுபள்ளியில் அமைந்துள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த அரியலூர் மாணவி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவி மரணத்துக்கு கட்டாய மதமாற்றம்தான் காரணம் என்று சர்ச்சை எழுந்தது. இதை முன்னிறுத்தி பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
ஆனால் நீதிபதி முன்னிலையில் மாணவி கொடுத்த மரண வாக்குமூலத்தில், “விடுதியில் தன்னிடம் மட்டும் அதிக வேலைகளை செய்ய சொல்லி வார்டன் கொடுமைப்படுத்தினார். அது தாங்க முடியாமல்தான் மருந்து குடித்தேன். என்னுடைய மரணத்துக்கு வார்டன்தான் காரணம்” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ”தமிழ்நாட்டில் கட்டாய மத மாற்றத்திற்கு இடமே இல்லை. எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் அரசு உள்ளது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என்று கூறியிருந்தார்.
மாணவி தற்கொலை தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிவசேனா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு நேற்று முறையிடப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘‘மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாணவியின் பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்திருக்க வேண்டும். கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறியதை வீடியோ பதிவு செய்தவர் மற்றும் மாணவியின் பெற்றோருக்கு போலீசார் அழுத்தம் கொடுப்பதாக மனுதாரர் தரப்பு கூறுகிறது. தற்போது விசாரணை செய்யும் போலீசார் இதுபோன்ற எவ்வித குற்றச்சாட்டும் எழாத வகையில் முறையாக வழக்கை விசாரணை செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
**-வினிதா**
�,