ஒமிக்ரான் – தமிழ்நாட்டில் ஊரடங்கா? : அமைச்சர் விளக்கம்!

Published On:

| By Balaji

ஒமிக்ரான் வைரஸ் அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா திரும்பிய ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக அந்நாட்டின் தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர் முழுமையாக தடுப்பூசி எடுத்து கொண்டவர் எனவும் அவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று(டிசம்பர் 2) மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”ஒமிக்ரான் வைரஸ் தென்னாபிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரேசில், நியூசிலாந்து, இஸ்ரேல், மொரிசீயஸ், உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. அதனால் ’ஹை ரிஸ்க்’ என்று பட்டியலிடப்பட்ட நாடுகளிலிருந்து தமிழ்நாடு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி நேற்று இரவு வெளிநாடுகளிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வந்து இறங்கிய 477 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், யாருக்கும் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை. இன்று மதுரை விமான நிலையத்தில் ஆய்வு செய்தோம். துபாயிலிருந்து வந்த பயணிகளிடம் சோதனை நடைபெற்று வருகிறது.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு 5-6 மணிநேரம் ஆகும். அதுவரை பயணிகள் விமான நிலையங்களிலேயே தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டால், அவர்களை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் சோதனையிலேயே ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிய முடியும். மேலும் நம்மிடமே மரபணு பகுப்பாய்வு மையம் உள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மதுரை மாவட்டம் மோசமான நிலையில் உள்ளது. தடுப்பூசியின் முதல் டோஸை 71% பேர் எடுத்துக்கொண்ட நிலையில், இரண்டாவது டோஸை 32% பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். மதுரை மக்கள் தயவுகூர்ந்து கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி மற்றும் முகக்கவசம் அணிந்து கொண்டாலே ஊரடங்குக்கு தேவை இருக்காது” என்று கூறினார்.

இதற்கிடையில் ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒமிக்ரானுக்கான சிகிச்சைக்காக 15 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க அச்சுறுத்தும் சூழலில், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு சீரம் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share