பிரதமருடன் பங்கேற்ற ராமர் கோயில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா!

Published On:

| By Balaji

அயோத்தி ராமர் கோயில், அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு வழா நடைபெற்றது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக 175 விஐபிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

இந்த விழாவின்போது மேடையில், பிரதமர் மோடியுடன் மேற்குறிப்பிட்ட நான்கு பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் பிரதமருடன் மேடையில் அமர்ந்திருந்த ராமர் கோயிலின் அறக்கட்டளையான, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா, அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்திய கோபால் தாஸுக்கு(80) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபால் தாஸுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதிக்கப்பட்டிருக்கும், குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கோபால் தாஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனையின் மருத்துவர் ட்ரீஹானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

அதுபோன்று, ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவருக்கு அனைத்து விதமான உதவிகளை வழங்கவும், உயர்தரமான மருத்துவ கவனிப்பு அளிக்கவும் மதுரா மாவட்ட மாஜிஸ்திரேட் எஸ்.ஆர்.மிஸ்ராவுக்கு உபி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவித்துள்ள மதுரா மாவட்ட மாஜிஸ்திரேட், கோபால் தாஸுக்கு சுவாச பிரச்சினைகள் இருந்தன. ஆன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இப்போதைக்குக் கவலைப்படும் படி எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப நாட்களாகக் காணொலி காட்சி மூலம் ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி நாளை மறு தினம் செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு கொடியேற்றி உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

**கவிபிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share