போலீசாரின் செயல்: பெண்ணிடம் வருத்தம் தெரிவித்த டிஜிபி!

Published On:

| By admin

தமிழக போலீஸ் அதிகாரி தன்னிடம் பொறுப்பற்ற வகையில் நடந்துகொண்டதாக இளம்பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகத் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

மதுமிதா பைத்யா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வரிசையாக மூன்று பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை டேக் செய்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், “நேற்று ஷீ செல் அவன்யூ ஈசிஆர் பீச்சில், அலுவலக நேரம் முடிந்து நானும் எனது நண்பரும் கண்ணியத்துடன் அமர்ந்திருந்தோம். அப்போது அங்கு வந்த பணியிலிருந்த காவலர் கண்ணியம் குறைவாக நடந்து கொண்டார்.

கடற்கரையில் அனுமதிக்கப்படுவதற்கான நேரம் குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது பணியிலிருந்த காவலர் ஒருவர் எங்களைக் குற்றவாளி போலவும் தீவிரவாதி போலவும் உருவகித்து ஆக்ரோஷமாகக் கத்தினார்.

‘பத்து மணிக்குப் பிறகு வட இந்தியாவில் சுற்றித்திரியுங்கள்’ என்று அவர் மிகவும் அவமரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். என்னை வட இந்தியர் என்று எப்படிக் குறிப்பிட முடியும். எனக்குத் தமிழ் பேசத் தெரியாது என்பதற்காகவா?

நான் அவரிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே என்னை அவரது வாகனத்தில் ஏறுமாறு மிரட்டினார். என் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாக மிரட்டினார். ஏன் இவ்வாறு நடக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. மேலும் கடற்கரையில் மக்கள் அனுமதிக்கப்படும் நேரம் குறித்து எந்த நிலையான அறிவிப்பும் இல்லை.

தயவுசெய்து ஒழுக்கம் மற்றும் நடத்தை முறைகள் குறித்து நல்ல முறையில் பயிற்சி கொடுங்கள். இவை அனைத்தும் சாதாரண விஷயங்கள் அல்ல. நான் குற்றவாளியல்ல என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்குத் தமிழகக் காவல்துறை ட்விட்டர் பக்கத்திலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “பணியிலிருந்த அந்த காவல்துறை அதிகாரியின் முரட்டுத்தனமான மற்றும் பொறுப்பற்ற நடத்தைகளுக்காக நான் வருந்துகிறேன். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று டிஜிபி சைலேந்திரபாபு வருத்தம் தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share