பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்து நேற்று மே 21ஆம் தேதி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் என்ற அளவில் குறையும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த 2021 நவம்பர் மாதம் விலையை குறைக்காத மாநில அரசுகளும் இனியாவது இதேபோல நடவடிக்கை மேற்கொண்டு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பாஜக தலைவர்கள் இந்த அறிவிப்பை பெருமிதமாக குறிப்பிட்டு வரும் நிலையில் முன்னாள் நிதி அமைச்சரான ப. சிதம்பரம் இந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் மாநிலங்களுக்கும் பங்கு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ப சிதம்பரம் வெளியிட்டுள்ள செய்தியில், “2 மாதங்களில் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 7 ரூபாயும் குறைத்திருக்கிறார்கள்.
இந்த அறிவிப்பில் மாநில அரசுகளுக்கு நிதி அமைச்சரின் அறிவுரை அர்த்தமற்றது. ஏனென்றால் மத்திய கலால் வரியை ஒரு ரூபாய் குறைக்கும் போது, அந்த ரூபாயில் 41 பைசா மாநிலங்களுக்கு சொந்தமானது.
அதாவது இப்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பில் மத்திய அரசு 59 பைசாவும், மாநிலங்கள் 41 பைசாவும் குறைத்துள்ளன. எனவே, மாநிலங்களை நோக்கி விரல்களை நீட்ட வேண்டாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரியை (மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாதது) ஒன்றிய அரசு குறைத்தால்தான் அது உண்மையான விலை குறைப்பாகும்”என்று தெரிவித்துள்ளார் சிதம்பரம்.
**வேந்தன்**