ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் பரவியுள்ள நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கடந்த நவம்பர் 24ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது வரை இந்தியா உட்பட 60க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, சண்டிகர், கர்நாடக என பல மாநிலங்களிலும் பரவியுள்ளது. மொத்தம் 38 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸின் பரவல் வீரியம் டெல்டாவை விட அதிகமாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் இதனைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்ற அச்சத்திலும் மக்கள் உள்ளனர்.
இந்நிலையில், 10 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களில் தொற்று அதிகம் உள்ளதால் அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை நேற்று எழுதினார். அதில், பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு, மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்துதல், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்களைக் குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
இந்தசூழலில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள், ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தமிழகத்தில் தடுத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், டிஜிபி மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், ஆந்திரா, கேரளாவில் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் பாதிப்பு ஏற்படலாம். அதுமட்டுமின்றி அடுத்து வரும் நாட்கள் பண்டிகை தினங்களாக உள்ளன. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கடற்கரை, தேவாலயங்கள், கோயில்கள், சுற்றுலா தலங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இதனைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முககவசம் அணிவது குறித்த விழிப்புணர்வைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தங்களது கருத்தைத் தெரிவித்தனர்.
இதையடுத்து அண்டை மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கலாமா? இப்போது உள்ள கட்டுப்பாடுகளை அப்படியே நீட்டிக்கலாமா? இல்லையெனில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.
நாளை மறுநாளுடன் ஏற்கனவே பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு முடிவடையவுள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**
�,