உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கீவ் நகரிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேறினர்.
இந்நிலையில் இன்று கார்கிவில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்கள், எந்த சூழ்நிலையிலிருந்தாலும் உடனடியாக பெசோச்சின், பாபே, பெஸ்லியுடோவ் ஆகிய பகுதிகளை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்குள் அடையுமாறு இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல் குறிப்பை 4:57 மணிக்கு வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு கருதியும், அங்கு நிலவும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டும் வெளியேற உத்தரவிட்டுள்ளது. இதனால், கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
**மற்றொரு மாணவர் பலி**
ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலால் உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று பஞ்சாப் மாநிலம் பர்னாலாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சந்தன் ஜிண்டால் உயிரிழந்துள்ளார்.
2018ஆம் ஆண்டு, மருத்துவ படிப்புக்காகச் சந்தன் உக்ரைன் சென்றார். வின்னிட்சியா தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பைப் படித்து வந்தார். இந்நிலையில், அவர் மூளைக்குச் செல்லும் ரத்தப்பாதை தொடர்பான முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு வின்னிட்சியா மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். சந்தனின் உடல்நிலை மோசமாக இருப்பதை அறிந்த அவரது தந்தை சிஷன் குமார் மற்றும் சகோதரர் கிரிஷன் கோபால் ஆகியோர் பிப்ரவரி 7ஆம் தேதி உக்ரைன் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை கவனித்து வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறையிடம் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
**-பிரியா**