சமஸ்கிருதம் நாடு முழுவதும் பேசப்படுகிறது: இல.கணேசன்

Published On:

| By Balaji

நாடு தழுவிய மொழியாக சமஸ்கிருதம் உள்ளதால் அதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருத மொழி தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் தேசிய சமஸ்கிருத மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதற்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இது தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கு செலவிட்ட தொகையைவிட பல மடங்கு அதிகம். தமிழுக்கு வெறும் 22.94 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டு மத்திய மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 19) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசனிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தமிழ், தமிழ்நாட்டில் மட்டும் பேசப்படுவதால் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய மொழியாக சமஸ்கிருதம் உள்ளதால் அதற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது” என பதிலளித்தார்.

ட்ரம்ப் வருகைக்காக அகமதாபாத் குடிசைப் பகுதிகள் சுவர் எழுப்பி மறைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு, “குஜராத்தில் காங்கிரஸ் அரசுதான் நடைபெறுகிறது. எனவே, அதைப்பற்றி அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்” என்று பதிலளித்தார். குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதாக இல.கணேசன் கூறியுள்ளார்.

**த.எழிலரசன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel