2001 டிசம்பர் 13ஆம் தேதியான இதே நாளில் யாரும் எளிதில் நுழைந்திட முடியாத, இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் 5 தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றனர். தாக்குதல் நடத்தி சில எம்.பி.க்களை பிணை கைதிகளாக வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்ததாக, பின்னாளில் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
சம்பவத்தன்று காலை 11.30 மணியளவில், வெள்ளை நிற அம்பாசிடர் கார் வந்தது. அதில் உள்துறை அமைச்சகம் வழங்கிய வாகன அனுமதிக்கான நுழைவு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதோடு அதில், இருந்த 5 பேரும் ராணுவத்தின் சீருடையை அணிந்திருந்தனர்.
இதனால் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானிக்கு பாதுகாப்பு வழங்க அழைக்கப்பட்டிருக்கலாம் என வெளிப்புற காவலர்கள், இந்த காரை நாடாளுமன்றத்துக்குள் செல்ல அனுமதித்தனர்.
இதையடுத்து உள்ளே சென்ற தீவிரவாதிகள், அங்குத் துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்தனர். நிலைமையைச் சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதில் 5 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர். அதோடு, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 8 பேர் மற்றும் ஒரு தோட்டக்காரரும் உயிரிழந்தனர்.
இந்தச்சம்பவம் நடந்து இன்று 20 ஆண்டுகள் கடந்த நிலையில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்ட 9 பேரின் படத்துக்கும் மலர் தூவி உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.
மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கையை நாயுடு தலைமையில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.களும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “2001 ஆம் ஆண்டு இந்த நாளில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்ற தாக்குதல் சமயத்தில் உயிர்த் தியாகம் செய்த துணிச்சலான பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் உன்னத தியாகத்திற்குத் தேசம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த அனைத்து பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்திற்கான அவர்களின் சேவையும், உச்சபட்ச தியாகமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**
�,