குடியுரிமை திருத்தச் சட்டத்தை விமர்சித்த மலேசிய பிரதமருக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள், மாணவர்கள், சமூக அமைப்புகள் ஒன்றுதிரண்டு நாடு முழுவதும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் கோலாலம்பூர் உச்சி மாநாட்டில் நேற்று பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை விமர்சித்தார்.
“தன்னை ஒரு பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியா, இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கும் விதமாக எடுத்துள்ள நடவடிக்கைகள் வருந்தத்தக்கவையாக உள்ளன. நாங்கள் மலேசியாவில் அதனை செய்தால் என்ன நடக்கும் என்று எங்களுக்கே தெரியாது. இங்கு குழப்பமும் உறுதியற்ற தன்மையும் ஏற்படும். அதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சுமார் 70 வருடங்களாக இந்திய குடிமக்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வாழ்ந்துவருகிறார்கள். இந்த சூழலில் இதுபோன்ற சட்டம் கொண்டுவர வேண்டியதன் அவசியம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வெளியுறவுத் துறை இன்று (டிசம்பர் 21) வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்து மலேசிய பிரதமர் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. மூன்று நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் சிறுபான்மையினருக்கு விரைவாக குடியுரிமை வழங்க இச்சட்டம் வழிவகுக்கிறது. இந்த சட்டம் எந்தவொரு இந்திய குடிமகனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது” என்று விளக்கியுள்ளது.
மேலும், “மலேசிய பிரதமரின் விமர்சனம் உண்மையில் முற்றிலும் தவறானது. உண்மைகளைப் பற்றிய புரிதல் இல்லாமல் இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை மலேசியா தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
�,