பணமதிப்பழிப்பின்போது 500, 1000 நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா சொத்துக்கள் வாங்கியதாக வருமான வரித் துறை குற்றம்சாட்டியுள்ளது.
சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். 4 நாட்கள் வரை நடந்த இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக சசிகலா குடும்பத்தினரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணையும் மேற்கொண்டனர். இதனிடையே சசிகலா தாக்கல் செய்த வருமான வரி விவரங்களை வருமான வரி அதிகாரிகள் மறுமதிப்பீடு செய்தனர்.
மறுமதிப்பீடு தொடர்பாக சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டுமென சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தார். அதில், “வருமான வரித்துறையிடம் வாக்குமூலம் அளித்த எனது உறவினர்களான கிருஷ்ணப்பிரியா, ஷகிலா, விவேக் ஜெயராமன், சிவக்குமார் உள்ளிட்ட 14 பேரிடமும், எனக்கு சொந்தமானது எனக் கூறப்படும் நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் ஆடிட்டர்களிடமும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். அதுவரை மறுமதிப்பீடு தொடர்பாக வருமான வரித் துறை உத்தரவு பிறப்பிக்கத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று (டிசம்பர் 20) விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித் துறை சார்பில், “2012-13 முதல் 2017-18 வரையிலான நிதியாண்டுகளுக்கான மறுமதிப்பீட்டு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. இதுதொடர்பான ஆணைகள் வருமான வரித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வழக்கினை முடித்து உத்தரவிட்டார்.
இதனிடையே சசிகலாவுக்கு எதிராக வருமான வரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட 2016 நவம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு மதிப்பு இழந்த 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி ஒரு ரிசார்ட், இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு சாப்ட்வேர் நிறுவனம், ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை, 50 காற்றாலைகள் ஆகியவற்றை சசிகலா வாங்கியுள்ளார். இவையனைத்தும் பல நூறுகோடி மதிப்புடையவை” என்று தெரிவித்துள்ளது.
பெரம்பூர், மதுரை கே.கே.நகர் ஆகிய இடங்களில் ஷாப்பிங் மாலும், புதுச்சேரியில் ரிசார்ட்டும், கோவையில் காகித ஆலையும், சென்னைக்கு அருகிலுள்ள ஒரகடத்தில் சர்க்கரை ஆலையும், பழைய மகாபலிபுரம் சாலையில் சாப்ட்வேர் நிறுவனமும், காற்றாலைகள் கோவையிலும் அமைந்துள்ளதாகவும் வருமான வரித் துறை கூறுகிறது.
�,