திமுக, மதிமுக, மநீம பிரமுகர்கள் வீடுகளில் ரெய்டு!

Published On:

| By Balaji

தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையினரின் ரெய்டுகள் கடந்த சில ஆண்டுகளாகவே வழக்கமாகியுள்ளன.

அந்த வகையில் திமுக, மக்கள் நீதி மய்யம், மதிமுக பிரமுகர்களைக் குறிவைத்து நேற்று (மார்ச் 17) வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.

அதிமுக கூட்டணியில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் போட்டியிடும் தாராபுரத்திலும், கமல் இன்று பிரச்சாரம் செய்ய வரும் திருப்பூரிலும் ரெய்டு நடந்துள்ளது.

மதிமுகவின் திருப்பூர் மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் கவி நாகராஜ். இவர் தாராபுரத்தில் பல்பொருள் அங்காடி, பனியன் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய அண்ணன் சந்திரசேகர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொருளாளராக இருக்கிறார். இவர், திருப்பூர் லட்சுமிநகர் பிரிஜ்வே காலனி விரிவாக்கம் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருவதோடு, நூல் வியாபாரமும் செய்து வருகிறார். மேலும் முக கவசம், கொரோனா கவச ஆடைகள் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை திருப்பூரில் இருக்கும் மக்கள் நீதி மய்ய பொருளாளர் சந்திரசேகர் வீட்டுக்கு காலை 10 மணிக்கே வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். கோவையில் அமைந்திருக்கும் அவரது அலுவலகத்துக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர்.

அதையடுத்து நேற்று பிற்பகல் தாராபுரத்தில் இருக்கும் அவரது சகோதர் கவி நாகராஜ் வீட்டுக்கும் வருமான வரித்துறையினர் சென்றனர். கவிநாகராஜ் வீட்டில் மாலை 4.15 மணிவரை சோதனை நடந்தது. ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இவர்களைத் தவிர கவிநாகராஜின் நண்பரும் தாராபுரம் திமுக நகர செயலாளர் தனசேகரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சோதனை விவரங்கள் பற்றி வருமான வரித்துறை வட்டாரங்கள் இன்னும் முழு விவரங்களை வெளியிடவில்லை. இந்த ரெய்டுகள் பற்றி நேற்று இரவு காரைக்குடியில் பேசும்போது குறிப்பிட்ட பாஜக பொதுச் செயலாளர் சி.டி. ரவி.”கறுப்புப் பணம் வைத்திருந்தால் இதுபோன்ற ரெய்டுகள் தொடரும்” என்று எச்சரித்துள்ளார்.

எனவே சட்டமன்றத் தேர்தலின் இந்த முதல் ரெய்டு நடவடிக்கையாலும், அதுகுறித்து பாஜக பொதுச் செயலாளர் தெரிவித்த கருத்தாலும் பரபரப்பு பற்றிக் கொண்டிருக்கிறது.

**வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share