5 ஆளுநர்களின் அவதாரம் – ஒவ்வொன்றும் ஒரு விதம் !

Published On:

| By Balaji

டெல்லி திகார் சிறையென்றாலும் அண்மை ஐந்தாண்டுகளில் புதுச்சேரி என்றாலும் உங்கள் நினைவுக்கு வரக்கூடிய பெயராக, கிரண் பேடி இருக்கக்கூடும். அவரைப் போலவே பல மாநிலங்களின் ஆளுநர்களும் சில மாதங்களாக தொடர்ந்து பேசுபொருளாக மாறியிருக்கிறார்கள்.

உச்சபட்சமாக பிரதமர் மோடியைத் தொட்டு, புத்தம்புதிதாக அதிரடியைக் கிளப்பியிருக்கும் மேகாலயா ஆளுநர் மாலிக், கடைசியாக இந்த வண்டியில் ஏறியிருக்கிறார்.

இவருக்கு முன்னரே, பலரும் இந்த அரங்கில் ஆட்டத்தை நடத்திவருகிறார்கள்.

அவரில் ஒருவர் தமிழக மக்களால் நன்கு அறியப்பட்டவர். அவரேதான்..! இப்போதைய பஞ்சாப் மாநில ஆளுநர், பன்வாரிலால் புரோகித்.

முன்னர், தமிழ்நாட்டில் ஆளுநராக அவர் வந்ததிலிருந்தே பல முறை சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்; அவை தனித்தனியான விவகாரங்கள். அரசுரீதியாக முந்தைய அதிமுக ஆட்சிக்கும் அவருடைய நியமனங்களுக்குமே சிக்கல் ஏற்பட்டது. அதற்கு முக்கிய உதாரணம், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பாவின் நியமனம். அப்பழுக்கற்றவர் என பன்வாரிலாலால் கூறப்பட்ட சூரப்பா மீது ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்து, அதிமுக ஆட்சியில் தனி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் விசாரணை முடிந்து அறிக்கை வருவதற்குள் ஆட்சியே மாறிவிட்டது. கடைசியாக பன்வாரிலாலும் பஞ்சாப்புக்கு மாற்றப்பட்டுவிட்டார்.

இப்போது, பஞ்சாப் முதலமைச்சருக்கும் அவர் குடைச்சலைத் தருகிறார் என பிரச்னை எழுந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றிவரும் 36 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம்செய்வதற்காக, சட்டப்பேரவையில் மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தனர். ஆனால், அவரோ அனுமதியளிக்காமல் இழுத்தடிக்கிறார் என்பது ஆளும் கட்சியின் அதிருப்தி.

அது பெரிதாக வெடித்துள்ளது.

அந்த சட்டமுன்வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால், அவரை எதிர்த்து தர்ணாவில் ஈடுபடப்போவதாக பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் அறிவித்துள்ளார்.

இது இப்படி என்றால், கேரள மாநிலத்திலோ ஆளுநர் ஆரிப் முகமது கான் தரப்பில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் மீது அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

குடியரசுத்தலைவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கவேண்டும் என ஆளுநர் பரிந்துரை செய்ததாகவும் அதற்கு அரசு மறுப்பு தெரிவித்தது என்பதே அங்கு விவகாரம். அரசுத் தரப்பிலோ அப்படியெல்லாம் ஒன்றும் நடைபெறவில்லை என முற்றிலுமாக மறுக்கிறார்கள்.

இந்தப் பிரச்னைக்கு பிள்ளையார்சுழி போட்டது, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசின் ரமேஷ் சென்னிதாலா. அவரே இந்த விவகாரத்தை விடாமல் கிளறிக்கொண்டு இருக்கிறார்.

ஆனால், “ நடனக் கலைஞரும் நடிகையுமான ஷோபனா, இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, சமஸ்கிருத அறிஞர் என்.பி. உண்ணி ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் தருவது என ஆளுநர் ஒப்புதல் தந்தார். நவம்பர் 3 ஆம் தேதி விழா நடைபெறுவதாக இருந்த விழா, ஆளுநரின் வசதிக்காக தள்ளிவைக்கப்பட்டது. இதில் வேறு எந்தக் கருத்தையும் ஆளுநர் கூறவில்லை.” என்று பல்கலைக்கழகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது பற்றி கல்விக் குழு முடிவெடுக்கும். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் பரிந்துரைசெய்ததாகக் கூறுவதில் உண்மை இல்லை என்றும் அந்தப் பட்டத்தை வழங்குவது என்பதை கல்விக்குழு தேர்வுசெய்து, அதை சிண்டிகேட் அங்கீகரித்து ஆளு நரின் ஒப்புதலுக்கு அனுப்புவதுதான் வழக்கம். இப்போதும் அதுதான் நடந்துள்ளது. தனி அதிகாரம் படைத்த பல்கலைக்கழக சிண்டிகேட் அமைப்பில், அரசின் தலையீடு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று விளக்கம் அளிக்கிறார், கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.பிந்து.

மேற்குவங்கத்திலோ ஆளுநர் ஜெகதீப் தாங்கருக்கும் முதலமைச்சர் மமதாவுக்கும் முந்தைய ஆட்சியிலேயே ஏழாம் பொருத்தம்தான். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னரும் தேர்தலின்போதும் இரு தரப்பும் எலியும்பூனையுமாகவே நடந்துகொண்டனர். மூன்றாவது முறையாக மமதா முதலமைச்சராக ஆனபிறகும் அதே நிலை தொடர்கிறது. பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்தில் இருக்கும் மமதா பானர்ஜி, பல்கலைக்கழகங்களில் வேந்தர் பொறுப்பில் ஆளுநரே இருக்கவேண்டும் என்பது அரசியல்சாசனத்தில் சொல்லப்படவில்லையே என புதிதாகக் கிளப்பியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் உத்தவ்தாக்கரே அரசாங்கத்துக்கும் அவ்வளவாக ஒத்துப்போகவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கொரோனா காலத்தில் உத்தவ்தாக்கரே மதச்சார்பற்றவராக இருந்தால் கோயில்களைத் திறக்கவேண்டும் என்று ஆளுநர் பொதுவெளியில் கருத்துத் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் உத்தவ்தாக்கரே, தன்னுடைய இந்துத்துவப் பற்றுக்காக கோஷியாரி சான்றிதழ் பெறவேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பெண்களின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பவேண்டும் என்றார் உத்தவ். அதற்குப் பதிலடியாக, மகாராஷ்டிர சட்டமன்றத்தில் அப்படியொரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று சொன்னார்.

**-முருகு**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share