சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தைப் பரிசோதித்ததில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்துள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய ‘இம்ப்ரோ’ என்ற மருந்தைக் கண்டுபிடித்துள்ளேன் என்று கூறியிருந்தார். இந்த மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தக் கண்டுபிடிப்பை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து ஜூன் 30இல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளி வைத்தனர். இதையடுத்து, கடந்த 26ஆம் தேதி சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவின் முன்பு நேரில் ஆஜரான டாக்டர் சுப்பிரமணியன் ஆஜராகி தான் தயாரித்த மருந்து குறித்த அனைத்து விவரங்களையும் விளக்கினார். விளக்கத்தை ஏற்றுக்கொண்ட மருத்துவக் குழு அடுத்தகட்ட ஆய்வுக்கு அரசுக்குப் பரிந்துரை செய்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பு நேற்று (ஜூன் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகாதாரத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், “மனுதாரர் தயாரித்த மருந்தில் கலக்கப்பட்டுள்ள சேர்க்கையின் அறிவியல் பின்னணியை ஆய்வு செய்தபோது அதில் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேல் நடவடிக்கைக்காக இம்ப்ரோ மருந்து மத்திய ஆயுர்வேதம் சித்த ஆராய்ச்சி கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணையைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
**எழில்**�,