ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு அவரது அண்ணன் மகள் தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்துவந்த போயஸ் கார்டன், வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது. இதுதொடர்பாக கடந்த 6ஆம் தேதி வெளியான பத்திரிகை செய்தியில், வேதா இல்லத்தை நினைவிடமாக்குவதால் எந்த குடும்பமும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள்தான் என அவரது அண்ணன் வாரிசுகள் தீபா, தீபக் ஆகியோர் தெரிவித்துள்ள நிலையில், வாரிசுதாரர் பெயரை அறிய வேண்டியுள்ளது எனவும் அரசின் அறிவிப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் வேதா இல்லத்தை நினைவிடமாக்குவது தொடர்பாக கடந்த 22ஆம் தேதி தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைவராகவும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உறுப்பினர்களாக இருப்பர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அவசரச் சட்டத்துக்கு ஜெ.தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு நேற்று (மே 24) அவர் அளித்துள்ள பேட்டியில், சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்போது, வேதா இல்லத்தை ஏன் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
“வேதா நிலையத்துக்குள் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவின் சொத்துகளை அவரது சட்டப்படியான வாரிசுகளிடம் ஒப்படைப்பதுதானே அரசின் நீதியாக இருக்க முடியும். நானும் எனது சகோதரரும் வேதா இல்லத்தை நன்றாகப் பராமரித்துக் கொள்வோம்” என்று கூறினார். கொரோனா வைரஸால் நாடே முடங்கியுள்ள நிலையில் இப்படி ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன எனவும் அவர் கேள்வியை முன்வைத்தார்.
வேதா இல்லத்தை மீட்கும் தங்களின் நியாயமான உரிமை சார்ந்த போராட்டத்துக்கு அதிமுக தொண்டர்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த தீபா, “எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர்செல்வமோ அல்லது வேறு எந்த அதிகாரியோ எனது அத்தையின் வேதா இல்லத்தில் ஒரு செங்கலைக் கூட தொடமுடியாத அளவு பார்த்துக்கொள்ள துணை நிற்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
நீதிமன்ற உத்தரவுடன் வீட்டை ஆய்வு செய்ய சட்டபூர்வ வாரிசுகள் அனுமதிக்கும் வரை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் உடைகள், நகைகள், புத்தகங்கள், விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் கார்களை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “வேதா இல்லம் தொடர்பாக விரைவில் ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளேன்” என்றும் கூறினார்.
தீபாவின் எதிர்ப்பு வேதா இல்லத்தை நினைவிடமாக்குவதைக் கடினமாக்கும் என்றே தெரிகிறது.
**எழில்**
�,