b> ராஜேஷ் கோச்சார், பார்த்தா மஜும்தார்
பேராசிரியர் ஜாய் சென் ஆய்வு செய்து ஐஐடி கராக்பூர் 2022 காலண்டரை இந்தியப் பாரம்பரிய அறிவு மீட்பு எனும் தலைப்பில் உருவாக்கியிருக்கிறார். இந்த காலண்டர் நம் கடந்த காலம் பற்றிய சொல்லாடலையும் கொண்டுள்ளது. ஹரப்பா நாகரிகத்தை உருவாக்கியவர்கள்தான் ரிக்வேதத்தை படைத்தவர்கள் என நிறுவ முயல்கிறது. இந்த நோக்கில் பல தவறான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
ஐஐடி- கராக்பூர் காலண்டரில் உள்ள கட்டுரை கைலாய மலையின் பனிப்பாறைகள் சிந்து சமவெளி நாகரிகத்தின் இரண்டு முக்கிய நதிகளான சிந்து, பிரம்மபுத்திரா நதிகளுக்கு மூலம் எனத் தெரிவிக்கிறது. இது தவறானது. பிரம்மபுத்திரா மானசரோவர் ஏரியில் உற்பத்தி ஆகிறது. சிந்து நிதி கைலாய மலையின் வடக்கில் உள்ள பனிப்பாறைகளில் உற்பத்தி ஆகிறது.
சிந்து நதியின் துணை நதிகள், மத்திய – கிழக்கு இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில் தோன்றுவதாக ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்தக் கட்டுரை மேலும் குறிப்பிடுகிறது. இதுவும் தவறானது. ரிக் வேதம் சிந்து நதி அமைப்பு பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறது. சிந்து நதியின் எந்தத் துணை நதியும் சிவாலிக் மலைத்தொடரில் உருவாகவில்லை.
இந்திய வேத நாகரிகத்தின் பாரம்பரிய காலம், ஆரியப் படையெடுப்பு என்னும் மாயையை வலியுறுத்துவதற்காகத் திட்டமிட்டு கிமு 2000 ஆண்டுக்குச் சுருக்கப்பட்டதாக இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. இதுவே வேத நாகரிகத்திலிருந்து சிந்து சமவெளி நாகரிகம் பிரித்துப் பார்க்கப்படக் காரணம் எனத் தெரிவிக்கிறது. வேத காலப் படைப்புகள் ஆய்வு செய்யப்பட்டபோது, அகழ்வாராய்ச்சி, மரபணுவியல் ஆகியவை வளர்ச்சி பெறவில்லை. இந்திரன் தாக்கியதாகச் சொல்லப்படும் கோட்டைகள் இந்தியாவில் இருந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டபோது அங்கு காணப்பட்ட கட்டடங்கள் இதற்குப் பொருந்தி அமையவில்லை.
ஹரப்பா நாகரிகம் வீழ்ச்சி அடையச் சுற்றுச்சூழல் காரணங்களே பிரதானம் என அறிஞர்கள் கருதுகின்றனர். ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு காலாவதியானது. ஆரியர்கள் துணைக்கண்டத்துக்கு வெளியிலிருந்து வந்தனரா, இல்லையா என்பதே முக்கிய கேள்வி. அவர்களை எப்படி அழைப்பது என்பது முக்கிய விஷயம் அல்ல. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டை நிராகரிப்பது, ஆரியர்களை ஹரப்பாவாசிகளாக ஆக்கிவிடாது.
இந்திய மொழிகளில் உள்ள லட்சக்கணக்கான வார்த்தைகளுக்கும் ஐரோப்பிய மொழியியல் மரத்தில் உள்ள மற்ற மொழிச் சொற்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கட்டுரை தெரிவிக்கிறது. இது மிகைப்படுத்தலாகும். சொல்லப்போனால், ஐரோப்பாவில் வடமொழி அறிமுகம் செய்யப்பட்டது, பழைய ஓலைச்சுவடிகள் அதிக அளவில் கிடைத்தன, மொழி ஆய்வு ஒரு அறிவியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகியவை இந்திய ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை முன்வைக்க உதவின. இந்தக் குடும்பத்துக்குள் இந்திய, இரானியக் கிளைகள் என இரண்டு கிளைகள் உண்டு. இவை ரிக் வேதம், அவெஸ்தா ஆகிய இலக்கியங்களை உருவாக்கின. இந்த இரண்டு வடிவங்களும் ஒன்றின் உதவி இல்லாமல் மற்ற மொழியை ஆய்வு செய்ய முடியாத அளவு நெருக்கமானது.
வடமொழியில் காணப்படும் ஆரிய, அசுரர்கள், யமா உள்ளிட்டவற்றுக்கு நிகரான சொற்களை அவெஸ்தாவில் காணலாம். ஆரியர்கள் தொடர்பான எந்தக் கோட்பாட்டை ஏற்கவும் முதலில், இந்திய – ஐரோப்பிய மொழி ஒற்றுமையையும் இந்திய – இரானிய இலக்கிய ஒற்றுமையையும் விளக்க வேண்டும். ரிக் வேதத்தில் தாமிரம், சக்கரம் ஆகியவை வருகின்றன.
சக்கரம் கிமு 4000ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது, ரிக் வேதம் அதற்கு முன்னர் இருந்திருக்க முடியாது. ஐஐடி கட்டுரை வேத கலாச்சாரத்தையும் சிந்து சமவெளி நாகரிகத்தையும் ஒன்றாக்கி கிமு 7000 காலத்தில் கொண்டு வர முயற்சி செய்கிறது. ஆரியர்கள் இந்தியாவில் இத்தனை முன்னதாக இருந்திருந்தால், அது மிகத் தீவிரமான சிக்கல்களைக் கொண்டுவரும்.
ஹரப்பாவாசிகள் ஆரியர்களாக இருந்திருந்தால், ஜாரதுஷ்ட்ரா இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். இந்த எழுத்து வடிவங்கள் இந்தியாவைக் குறிப்பிடவில்லை. அண்மையில், பேராசிரியர் ஜாய் சென், ஆரியத் தாக்குதல் கோட்பாட்டை மரபணு வல்லுநர்கள் திணிப்பதாகக் குற்றம் சாட்டினார். இது முழுப் பொய். மரபணுக்கள் வரிக்கப்படுகின்றன. ஒரே முன்னோர்களைக் கொண்ட தனி நபர்கள் ஒரே விதமான மரபணுக்களைக் கொண்டிருப்பார்கள்.
வேறு வேறு முன்னோர்களைக் கொண்ட தனி நபர்கள் குழு, வேறுபட்ட முன்னோர்களைக் கொண்ட குழுவிலிருந்து பொதுவான சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதுடன் வேறுபட்ட மரபணு குணங்களையும் கொண்டிருக்கலாம். இந்தப் பகிர்வும் வேறுபட்ட மரபணு குணங்களும் சமகால மக்கள்தொகையின் வழித்தோன்றலை அறிய உதவுகின்றன. மேலும், மரபணுக்கள் மக்களுடன் நகர்வதால், மக்கள்தொகையில் காணப்படும் மரபணு குணங்களின் அமைப்பு, குறிப்பிட்ட மக்கள்தொகையின் மரபணு வரைவைக் கொண்டு இடம்பெயர்தல் தன்மையை அறிய உதவுகிறது.
ஆரியர்களால் உருவாக்கப்பட்ட யோகா அமைப்பு, ஷேமா ஒத்திசைவு கொண்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக் வேதத்தில் இதற்கான குறிப்பு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரிக் வேதத்தில் இவ்வாறு குறிப்பு இல்லை.
**உலகப் போர்கள் குறித்த கருத்துகள்**
ஐஐடி கட்டுரை, நாஜிக்களின் இன ஆதிக்கக் கோட்பாட்டைக் கருத்தில் கொண்டாலும் ஐரோப்பிய வரலாற்றைச் சிதைக்கிறது. இரண்டு உலகப் போர்களும் ஒரே போட்டியின் இரண்டு அத்தியாயங்கள் போல இது பேசுகிறது. இதனிடையே 20 ஆண்டுகள் இருந்தன. இந்தக் காலத்தில்தான் ஹிட்லரும் அவரது துவேஷமும் எழுச்சி பெற்றன.
ஆரியவாதம் முதல் உலகப் போரின் அம்சம் அல்ல. இருந்தும் கட்டுரையில், 1914 முதல் 1945 வரை, ஆரியப் படையெடுப்பின் ஐரோப்பிய வரையறையால் 120 மில்லியன் மக்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. காலனியாதிக்கத்தையும் கட்டுரை கண்டிக்கிறது. ஆனால், இந்திய வரைபடத்தில் கங்கை நதியை கேஞ்சஸ் எனக் குறிப்பிடுகிறது. இந்தியர்கள் மற்றவர்களுக்குப் பொருட்களையும், கருத்தாக்கங்களையும் அளித்துள்ளனர். அதே சமயம் மற்றவர்களும் நம் கலாச்சாரத்துக்குப் பங்களித்துள்ளனர் என்பதை ஏற்காமல் இருப்பது ஏன்?
ஆரியர்கள் மேம்பட்டவர்கள் என்று சொல்லும் வாதம் ஆதாரமற்றது. அது தொடர்பாக விவாதிப்பதே வீண். இந்த வகையான இரட்டை நாக்கு வாதம், இந்தியப் பாரம்பரிய அறிவு முறையை மீட்டெடுப்பது எனும் பெயரில் நிகழ்த்தப்படுகிறது. இத்தகைய மீட்புவாதம், தீவிர ஆய்வு, அறிவியல் தரவுகள் ஆகியவற்றை அலட்சியம் செய்வது மோசமான பலனையே அளிக்கும்.
*
நன்றி: **[தி ஸ்டேட்ஸ்மேன்](https://www.thestatesman.com/opinion/a-terrible-bargain-1503042485.html)**
தமிழில்: **சைபர் சிம்மன்**
�சிறப்புக் கட்டுரை: ஐஐடி கராக்பூர் காலண்டர்: வரலாற்றைத் திரிக்கும் போலி ஆய்வு!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel