yமுதல்வர் வசம் சுகாதாரத் துறை: ஸ்டாலின் யோசனை!

Published On:

| By Balaji

அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்குக்கு முன்பாக மிகக் குறைந்த அளவில் இருந்த கொரோனா நோய்த் தொற்று நேற்று 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. , தற்போது இறப்பின் எண்ணிக்கை 367 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளர் பதவியிலிருந்து பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டு, ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இறப்புகள் குறித்த சென்னை மாநகராட்சியின் கணக்குக்கும் சுகாதாரத்துறை கணக்குக்கும் வேறுபாடு இருப்பதைப் பல நாளிதழ்களும் வார இதழ்களும் சுட்டிக்காட்டியுள்ளன. சென்னையில் மட்டும் 400க்கும் அதிகமான கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதால்தான், சுகாதாரத்துறை இணை இயக்குநர் வடிவேலன் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்புக்குழு நியமிக்கப்பட்டு, ஆய்வை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்துதான் சுகாதாரத்துறைச் செயலாளர் மாற்றத்திற்கான அறிவிப்பும் வெளியானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் அதே நேரத்தில், பரிசோதனைகள் குறித்தும், தனிமைப்படுத்துதல் குறித்தும் முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகளே வெளியிடப்பட்டு வருகின்றன. மருத்துவப் படுக்கைகள் குறித்து முரண்பாடான தகவலே வெளிப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் ஸ்டாலின்,

“ஒவ்வொரு அறிவிப்பிலும் முரண்பாடுகள் இருப்பது ஏன்? ஆலோசனைகளையும் முடிவுகளையும் யார் எடுக்கிறார்கள்? சுகாதாரத்துறையின் கைகளை மீறி அதன் அதிகார எல்லையைப் புறக்கணித்துச் செயல்படுகிறார்களா? சுகாதாரத்துறையில் அமைச்சர் – அதிகாரிகளிடையே குழு மனப்பான்மைப் போட்டியினால், இந்தக் குழப்பங்களா? எடப்பாடி பழனிசாமிக்கு மேலே, அவரை விஞ்சிய சூப்பர் முதல்வர்களின் கைகளில் நிர்வாகம் இருக்கிறதா” என்று கேட்டுள்ளார்.

“முதலமைச்சரோ, சமூகப் பரவல் இருந்தால் நீங்களும் நானும் இப்படி இருக்கமுடியுமா என ஊடகத்தினரிடம் ஏகடியம் பேசியபடி, அவரே அறிவித்த பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணியாமல், இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், கட்சிக்காரர்கள் அதிகாரிகளுடன் கூடி நின்று, அணை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பரவல் எந்தளவுக்கு வேகமாக இருக்கும் என்பது குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தனது ஆய்வு முடிவுகளை அரசுக்கு வழங்கியிருக்கிறது. அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, மக்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்கச் செய்து, அவர்களை அரசு பாதுகாத்திட வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “துறைச் செயலாளரை மாற்றிய கையோடு பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் துறை அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும். இந்த இக்கட்டான கட்டத்தில், பேரிடர் தணிப்புப் பணிகளில், அடிப்படை ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதே குளறுபடிகளுக்கும் குழப்பங்களுக்கும் காரணம் என்று நிபுணர்கள் கணித்துள்ளார்கள். அப்படிப்பட்ட முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட, சுகாதாரத் துறையை முதலமைச்சர் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share