தமிழ்நாடு காவல் துறையில் கடந்த மார்ச் 17ஆம் தேதி 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதோடு, ஐஜி அந்தஸ்தில் இருக்கும் 7 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஏடிஜிபி அந்தஸ்தில் அவர்கள் உயர்த்தப்பட்டுள்ளனர்.
ஆயுஷ்மான் திவாரி, மகேஸ்வர தயாள், சுமித் சரண், அபின் தினேஷ், சஞ்சய் குமார், செந்தாமரைக் கண்ணன், வனிதா ஆகிய ஏழு ஐஜி அதிகாரிகள் ஏடிஜிபி களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் ஐஜி முருகன் இடம்பெறவில்லை. பாலியல் புகார்களுக்கு உள்ளாகி சர்ச்சைகளை சந்தித்த ஐஜி முருகன் பெயரை தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யவே இல்லை என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் 1964 ஜூன் மாதம் 3ஆம் தேதி பிறந்தவர். 1997இல் தமிழக காவல் துறையில் டிஎஸ்பி,யாக பணியில் சேர்ந்தார்.
பணியில் சேர்ந்த 25வது வருடமான 2022-ல் இவர் ஏடிஜிபி ஆக பதவி உயர்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் முருகனுக்கு ஏடிஜிபி பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது…
“முருகன் திறமையான போலீஸ் அதிகாரி என்றாலும் அவர் மீது அவர் பணியாற்றிய பல நிலைகளில் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
கடலூர் மாவட்டம் முதுநகர் காவல் நிலையத்திற்கு சென்ற ஒரு பெண் போலீஸ் அங்குள்ள அதிகாரியிடம், ‘இந்தாங்க முருகன் பேசுகிறார்’ என்று செல்போனை கொடுத்து காரியத்தை சாதித்தார். இதுபோலப் பல புகார்கள் காவல் துறைக்கு உள்ளேயே விவாதிக்கப்பட்டு முடிக்கப்பட்டன.
2018இல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குனராக இருந்த முனைவர் சி. முருகன் தனக்கு கீழ் பணியாற்றிய பெண் எஸ். பி. க்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
பொறுத்துக்கொள்ள முடியாமல் மன வேதனையோடு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்தப் பெண் எஸ்.பி.யை குடும்பத்தினர் நல்ல வேளையாக காப்பாற்றினார்கள்.
அவர்கள் கொடுத்த தைரியத்தில் தான், கடந்த எடப்பாடி ஆட்சியில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி க்கு, ஐஜி முருகன் மீது தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகார் கொடுத்தார் அந்த பெண் எஸ் பி.
அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின், 2018 செப்டம்பர் 27ஆம் தேதி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
அதில், ‘பணியாற்றும் அலுவலகத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் எஸ். பி. கொடுத்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கடமையை மறந்து.. கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு தனது ஊழல் வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற தரங்கெட்ட எண்ணத்துடன் அந்த புகாருக்குள்ளான ஐஜி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அந்த அதிகாரியை காப்பாற்றி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கண்டிக்கிறேன்’ என்ற காட்டமான அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின். அதன் பிறகும் அந்த புகாரின் அடிப்படையில் ஐஜி முருகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதன் பிறகு, 2021 இல் திமுக ஆட்சியை அமைத்து மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும் பாலியல் புகாருக்குள்ளான முருகன் சத்தியமங்கலம் எஸ். டி .எஃப் க்கு மாற்றப்பட்டார்.
காவல் துறையில் அதிகாரிகளின் பதவி உயர்வுக்காக வருடா வருடம் RR ( ரெகுலர் ரெக்யூமன்ட்) SPS (ஸ்டேட் போலீஸ் சர்வீஸ்) ஐபிஎஸ், கன்ஃபர்டு ஐபிஎஸ் ஆகிய நிலைகளில் பதவி உயர்வு பெற வேண்டிய அதிகாரிகளின் நன்னடத்தை குறிப்புகளை மாநில அரசு தயாரித்து ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு தமிழக உள்துறையில் இருந்து அனுப்பப்பட்ட அதிகாரிகள் பட்டியலில் ஐஜி முருகன் பெயர் இடம்பெறவில்லை.
பெண் எஸ். பி. யிடம் பாலியல் அத்துமீறல் செய்த புகாரில் சிபிசிஐடியில் முருகன் மீது எஃப். ஐ. ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதால் முருகன் பெயரை தவிர்த்து மற்ற ஏழு ஐஜிகள் பெயரை மட்டுமே பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசு”என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.
பொதுவாக அரசு ஊழியர்கள் குற்ற வழக்கு சம்பந்தமாக எஃப். ஐ.ஆர். பதிவு செய்ததும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். அப்படிதான் கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விரைவில் முருகன் மீதுள்ள வழக்கு விசாரணையும் வேகம் எடுக்கும். அதனால் சஸ்பெண்ட் செய்யவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் கோட்டை வட்டாரங்களில்.
**வணங்காமுடி**