ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை தன்னிச்சையாகக் குத்தகைக்கு விடுவது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தத் துறையின் புதிய செயலாளர் அமுதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அண்மையில் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டது. ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றியக் குழு, மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு ஆகியவற்றில் உறுப்பினர்கள், தலைவர்கள் பங்கேற்கும் நிர்வாகம் செயல்படத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, மத்திய அரசுப் பணியிலிருந்து தமிழகம் திரும்பிய ஆட்சிப் பணி அதிகாரி அமுதா, ஊரக வளர்ச்சித் துறையின் செயலராக நியமிக்கப்பட்டார்.
அதிரடி அதிகாரிகள் பட்டியலில் ஒருவரான அவர், வந்த கையோடு நிர்வாகத்தில் இருக்கும் பல தவறான நடைமுறைகளில் கைவைத்துள்ளார். ஏரிக் குத்தகை விதிமீறல் அதில் முக்கியமானது. ஊராட்சிக்குச் சொந்தமான குளம், ஏரிகளைக் குத்தகைக்கு விடுவதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை மீறி அந்தந்த ஊரளவில் ஏலம் விட்டுக்கொண்டு, குறிப்பிட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் பலன் அடைகின்றனர். மாநிலம் முழுவதும் இதனால் அரசுக்கு வர வேண்டிய பெருமளவு நிதியைக் கொள்ளையடிப்பதைப்போல தனிநபர்கள் சாப்பிட்டு ஏப்பம் விடுகின்றனர்.
நீண்ட காலமாக தொடர்ந்துவரும் இந்த மோசடியையும் நிதியிழப்பையும் தடுத்து நிறுத்த, புதிய செயலாளர் அமுதா அதிரடியாகக் களமிறங்கினார்.
சமூக ஊடக காலகட்டமான இப்போது, இது தொடர்பாக அவரின் குரலில் வாட்ஸ்அப் மூலமாக அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்து ஊராட்சிச் செயலர்கள், ஓவர்சீயர்கள், உதவி வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பொறியாளர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்கூறி ஆரம்பிக்கிறது, அந்த குரல் உத்தரவு.
“நிறைய ஊராட்சிகளில் ஏரிகளை ஊர்க் குத்தகை பேசி மீன் குத்தகைக்கு ஏலம் விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். இது ஒரு தவறான முன்னுதாரணம். ஏரி, குளம் ஏலம் விடவேண்டுமென்றால் அது தொடர்பாக முதலில் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, ஏரி ஏலம் கொடுப்பதென்றால் அலுவலகம் மூலமாகத்தான் விட வேண்டும்; அலுவலக ஊழியர்கள்தான் வருவார்கள்; அலுவலகத்தில் பணம் கட்ட வேண்டும். உரிய தொகை அலுவலகத்தில்தான் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு ஏரியையும் ஒரு லட்சம் ரூபாய் வரை பேசிவிட்டு, சுமார் 20 ஆயிரம் வரை அலுவலகத்தில் கட்டிவிட்டு, மீதிப் பணத்தை அந்தச் செலவு இந்தச் செலவு என ஊராட்சியில் கணக்கு காட்டுவது தவறானது. இதைப் போல எந்த ஊராட்சியிலாவது நாங்கள் கேள்விப்பட நேர்ந்தால், ஏலம் விட்டவர்கள், எடுத்தவர்கள், துணைபோனவர்கள் அத்தனை பேர் மீதும் போலீஸில் புகார் கொடுக்க வேண்டிவரும்” என்று அமுதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், “இதுவரை அப்படி ஏதும் ஏலம் விட்டிருந்தால், அலுவலகம் மூலமாக எந்தவித உத்தரவும் தராததால், அந்த ஏரி ஏலம் செல்லாது. நிச்சயமாக ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுப்பதாக இருக்கும். இதனுடைய தீவிரத்தைப் புரிந்துகொள்ளுங்கள். இப்போது புதிதாக வந்திருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் குளத்துக்கு வேண்டுமானால் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கேட்டுக்கொண்டு செய்யலாம். ஏரியின் மீது எந்தவித உரிமையை யாரும் கொண்டாடக் கூடாது. அதில் அலுவலகம் மூலமாகவே எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இதை கறாராகச் சொல்கிறேன்.”
“இதைப்போலவே, (மழைத்)தண்ணீரை கோடியில் கொஞ்சமாக உடைத்துவிட்டுக்கொள்கிறோம் என பொதுமக்கள் சொல்வதால், உடைத்துவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மாதிரியான எந்தவித நிகழ்வுகளும் இனிமேல் இருக்கக் கூடாது. அப்படி ஏதும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இதில் அதிகமாக ஊராட்சிச் செயலர்கள்தான் பதில் சொல்வதாக இருக்கும். ஏனென்றால், அலுவலகத்துக்கும் ஊராட்சி (தலைவர் தலைமையிலான) மன்றத்துக்கும் நீங்கள்தான் பாலம். (உள்ளாட்சித் தேர்தல் முடிந்து) ஊராட்சி மன்றம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். தயவுசெய்து யாரும் எந்தவிதமான (எதிர்க்)கருத்துக்களுக்கும் இடம்கொடுக்காமல் இருக்க வேண்டும். ஏரியாவில் ஏரிக்குத்தகை ஏதும் விடப்பட்டால் வட்டார வளர்ச்சி அதிகாரியின் கவனத்துக்கு உடனே கொண்டுவர வேண்டும்” என்றும் ஊரக வளர்ச்சித் துறையின் செயலர் அமுதா கறார் குரலில் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்னர் இப்படியொரு உத்தரவைச் சந்தித்திராத தொடர்புடைய துறை அதிகாரிகள், ஊழியர்கள் இடையே உண்மையிலேயே இது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
**- கதிரவன்**
�,”