நஞ்சப்பசத்திர மக்களுக்கு நன்றி தெரிவித்த விமானப்படை!

Published On:

| By Balaji

ஹெலிகாப்டர் விபத்தின் போது விரைந்து செயல்பட்ட நஞ்சப்பசத்திர மக்களுக்கு விமானப்படை நன்றி தெரிவித்து கடிதம் எழுதியது.

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி குன்னூரில், முப்படை தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி, எரியும் நிலையில் அங்கு சிதறிக் கிடந்தவர்களை மீட்கவும், தீயை அணைக்கவும் காட்டேரி, நஞ்சப்பசத்திர மக்கள் உதவினர். இந்நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக தமிழக டிஜிபி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து கம்பளி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அதுபோன்று விமானப் படை சார்பில் அரிசி, பருப்பு, சர்க்கரை, உப்பு என நான்கு பொருட்கள் வழங்கப்பட்டதோடு, நஞ்சப்பசத்திரம் மக்களுக்கு தனித்தனியே நன்றி கடிதம் அனுப்பப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விமானப்படை துணை மார்ஷல் சஞ்சீவ் ராஜ் எழுதியுள்ள கடிதத்தில், “டிசம்பர் 8ஆம் தேதி எதிர்பாராத நடந்த துயர சம்பவமான ஹெலிகாப்டர் விபத்தின் போது தாங்களும் தங்கள் ஊர்மக்களும், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த அனைத்து உதவிகளுக்கும் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் இந்திய விமானப்படை சார்பில் நன்றி கூறுகிறோம். தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்,

இந்த மீட்பு பணியின் போது உயிருடன் மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கேப்டன் வருண் சிங் மட்டும் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

**பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share