நான் தான் அதிமுக பொதுச்செயலாளர்! அமைச்சர்களிடம் பேசிய சசிகலா

Published On:

| By Balaji

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று, கர்நாடக பரப்பன அக்ரஹார சிறையில் சிறைவாசம் முடிந்து விடுதலையாகியிருக்கும் சசிகலா, ஆட்சி போனால் போகட்டும், அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என்று அதிரடி அரசியலில் இறங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்!

2017இல் பாஜக சதியால், ஒபிஎஸ் மூலமாக அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க முயன்றபோது, சசிகலா தனது தீவிரமான முயற்சியால் பொன்முட்டையாக ஆட்சியையும் கட்சியையும் பாதுகாத்து எடப்பாடியிடம் ஒப்படைத்துவிட்டு சிறைக்குச் சென்றார்.

ஜனவரி 31ஆம் தேதி விடுதலையாகி தனியார் பண்ணை வீட்டுக்கு வந்ததிலிருந்து அதிமுக கட்சியை மீட்பது பற்றித்தான் பேசிவந்தார் , கடந்த எட்டு நாட்களில் இரண்டு நாட்கள்தான் தினகரனுடன் நேரில் பேசினார் சசிகலா, அதன் பிறகு தினகரனுக்கு முக்கியமான அசைன்மெண்ட்கள் கொடுத்ததால் அவர் சென்னைக்குச் சென்று மதுரை, தென்காசி பகுதிக்குச் சென்றவர் நேற்று பெங்களூர் வந்தார், நேற்று பிப்ரவரி 7ஆம் தேதி, சசிகலாவைச் சந்தித்து பேசியுள்ளார் ஹேப்பியாக.

சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் மூலமாக வாட்ஸ் அப் காலில் நலம் விசாரிப்பவர்கள், அம்மா நீங்கள்தான் கட்சிக்குத் தலைமை ஏற்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துவருகிறார்கள், சில அமைச்சர்களையும் எம்.எல்.ஏ,க்களையும் சசிகலாவே தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதில், சிலரிடம் உருக்கமாகவும் உரிமையாகவும் பேசியுள்ளார். நான் கட்சி பதவியைக் கேட்கவில்லை, முதல்வர் பதவியைக் கேட்கவில்லை, நீங்கள்தான் பொதுக்குழுவை கூட்டி என்னைப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்து தீர்மானம் போட்டு, அந்த தீர்மானம் காப்பியோடு போயஸ் தோட்டத்தில் என்னைச் சந்தித்து அதிமுக,வுக்கு தலைமை ஏற்க சொன்னீர்கள், அன்று நான் கட்சிக்குத் தலைமை ஏற்கவில்லை என்றால் கட்சியும் காணாமல் போயிருக்கும், ஆட்சியையும் பாஜக ஆதரவோடு ஒபிஎஸ் கவிழ்த்திருப்பார் என்றுள்ளார்.

ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து நேற்று பிப்ரவரி 7ஆம் தேதி வரையில் வழக்கறிஞர்கள் குழுவினர்களுடன் கட்சியை மீட்பதுபற்றி ஆலோசனைகள் செய்துள்ளார் சசிகலா.

2016 டிசம்பர் 29 அன்று வானகரத்தில் அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்து தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். 2017 செப்டம்பர் மாதம் ஒபிஎஸ் இபிஎஸ் இணைந்து சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார்கள்.

அப்போது சசிகலா தரப்பில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என்று நீதிமன்றப் படியேறினார்கள். அந்த வழக்கு சம்பந்தமாகத் தீவிரமாக ஆலோசனைகள் செய்துவருவது ஒருபக்கம் இருந்தாலும், இன்று சசிகலாவை வரவேற்கப்போகும் நிகழ்ச்சியை டெல்லி திரும்பிப் பார்க்கும் என்கிறார் அந்த பெங்களூரு வழக்கறிஞர்.

சமீபத்தில் சசிகலாவைச் சந்தித்தவர்களில் ஒருவரிடம் சசிகலா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தோம்.

சிறைக்கு போகும் முன்பிருந்த சசிகலா வேறு சிறையிலிருந்து வெளியில் வந்திருக்கும் சசிகலா வேறு.

சிறை, சசிகலாவை பக்குவப்படுத்தியுள்ளது, கோபப்படாமல், நிதானமாக மற்றவர்கள் சொல்வதையும் கேட்கிறார், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்.

முப்பது வருடங்கள் ஜெயலலிதாவுடன் இருந்தவர், அதில் சில காலங்களில் ஆட்சி நிர்வாகத்தையும், கட்சியையும் நிழல் மனிதராக இயக்கியவர், ஜானகி அணி பிரிந்தபோதும், ஆர்.எம்.வீரப்பன் அதிமுக,வை அடைய முயன்றபோதும் பலவிதமாகக் கடுமையான போராட்டங்களைச் சந்தித்தும், சூழ்ச்சிகளைக் கண்டறிந்து போராடி அதிமுக,வை மீட்டபோது ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா, அதனால் எந்த சூழ்நிலையிலும் அரசியலைவிட்டு ஒதுங்கமாட்டார், அதிமுகவை மீட்டெடுப்பார், விரைவில் அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவார் சசிகலா.

பிரதமர் 14ந் தேதி சென்னை வருகிறார், பிப்ரவரி 24ஆம் தேதி, ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை என்றால், நான் தான் அதிமுக பொதுச்செயலாளர், அதிமுக,வை மீட்க அமமுக ஒரு பாதை என்று அமமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செல்லவும் தயாராகவுள்ளார் சசிகலா என்கிறார் அவர் .

**–வணங்காமுடி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share