aசசிகலாவிடம் பேசியது என்ன?- ஹைதர் அலி

Published On:

| By Balaji

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரும் தமுமுக தலைவராக இருந்தவருமான ஹைதர் அலி நேற்று (மார்ச் 2) சென்னையில் சசிகலாவை சந்தித்திருக்கிறார்.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக ஆகியவற்றில் ஜவாஹிருல்லாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹைதர் அலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தாங்கள் தான் தமுமுக என்று இரு தரப்பினரும் கூறிவருகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் இருக்கிறது.

இந்தப் பின்னணியில் மனிதநேய மக்கள் கட்சி திமுக அணியில் இரண்டு தொகுதிகளுக்கு கையெழுத்திட்டுள்ள நிலையில் ஹைதர்அலி சசிகலாவை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு இஸ்லாமிய அரசியல் வட்டாரத்தில் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த பிறகு மின்னம்பலம் சார்பாக ஹைதர் அலியிடம் பேசினோம்.

“மறைந்த எம். நடராஜன் எனது நெருங்கிய நண்பர். அவரது மறைவின்போது திருமதி சசிகலா அவர்களை சந்தித்து என்னால் இரங்கல் தெரிவிக்க முடியவில்லை. ஏனென்றால் அப்பொழுது அவர் சிறையிலிருந்து பரோலில் வந்து குறுகிய நாட்களிலேயே சிறைக்கு திரும்பி விட்டார். அதனால் என் நெருங்கிய நண்பரின் மறைவுக்கு அவரின் மனைவியிடம் துக்கம் விசாரிக்க வேண்டிய நிலையில் நான் சசிகலா அவர்களை சந்தித்தேன் . தற்போதைய அவரது உடல் நலத்தையும் விசாரித்தேன். நன்றாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்”என்று கூறிய ஹைதர் அலியிடம் சசிகலாவிடம் அரசியல் பேசினீர்களா என்று கேட்டோம்.

“நிச்சயமாக பேசினேன். 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா அம்மையார் நாடாளுமன்ற தேர்தலில் லேடியா மோடியா என்ற முழக்கத்தை முன் வைத்தார். இந்த முழக்கத்துக்கு தமிழ்நாட்டு மக்களும் மகத்தான ஆதரவளித்து அந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களை அதிமுகவுக்கு கொடுத்தார்கள். 1999 லேயே எங்களது மாநாட்டில்தான் ஜெயலலிதா அவர்கள், ‘பாஜகவை நான் தான் ஆட்சிக்கு கொண்டு வந்தேன். அந்த பாவத்துக்கு நானே அந்த ஆட்சியை கலைத்தேன். கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்று பேசினார்கள்.

இந்த அடிப்படையில் உங்களிடம் நாங்கள் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறோம். தமிழ்நாடு சமூக நீதியின் அடையாளமாக திகழ்கிறது. தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் வளர்த்த நாடு. தங்களது கணவர் நடராஜன் அவர்களும் ஒரு பெரியாரிஸ்ட் தான். நீங்களும் அம்மாவின் வழி வந்தவர்தான்.

நீங்கள் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டிய ஒரு சூழ்நிலை வந்தபொழுது அந்தப் பதவிக்கு நீங்கள் வந்து விடக்கூடாது என்ற அடிப்படையில்தான் சில சட்ட சிக்கல்களை ஏற்படுத்தி உங்களை சிறையில் அடைத்தார்கள். அதனால் நீங்கள் எந்த சூழ்நிலையிலும் பாஜகவுக்கு ஆதரவாக இருந்துவிடக் கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள், கோரிக்கை’ என்று கூறினேன். நான் கூறியதைக் கேட்டு தலையசைத்து ஏற்றுக்கொண்டார் சசிகலா”என்று தெரிவித்தார் ஹைதர் அலி.

**ஆரா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share