முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக இருக்கும், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் வீடு உள்பட 36 இடங்களில் நேற்று (அக்டோபர் 22) மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸார் (விஜிலென்ஸ்) சோதனை நடத்தினார்கள்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள புத்திரகவுண்டன் பாளையம்தான் இளங்கோவனின் சொந்த ஊர். அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பேரவையின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருக்கும் இளங்கோவன், எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாமுமாக இருப்பவர்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் பிரவீன்குமார் ஆகியோர் கடந்த 2014 முதல் 2020 வரை வருமானத்தைவிட 131 சதவீத சொத்துகள் அதிகமாக சேர்த்துள்ளது தெரியவந்தது. அதாவது, அவர்கள் ரூ.3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755-க்கு சொத்து சேர்த்துள்ளதாக விஜிலென்ஸ் போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து இளங்கோவனின் புத்திரகவுண்டன் பாளையம் வீடு, தோட்டம், அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நேற்று முழுதும் விஜிலென்ஸ் ரெய்டு நடத்தினார்கள்.
விஜிலென்ஸ் எப்போது வேண்டுமானாலும் தன் வீட்டுக் கதவைத் தட்டலாம் என்பதை எதிர்பார்த்தே இருந்துள்ளார் இளங்கோவன். மேலும் கடந்த சில வாரங்களாகவே அவரை கண்காணிக்கும் படலத்தையும் தொடங்கியுள்ளனர் போலீஸார். அதாவது ரெய்டு வருவார்கள் என்ற தகவலை சம்பந்தப்பட்டவருக்கே கசிய விட்டு அவர் என்னென்ன செய்கிறார் என்பதை கண்காணிப்பார்கள். அந்த வகையில் எப்போதும் டிரைவருடன் தனது வாகனத்தில் பயணிக்கும் இளங்கோவன், கடந்த சில வாரங்களாகவே செல்ஃப் டிரைவிங்கில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு தான் மட்டுமே சென்று வந்திருக்கிறார். அதுவும் அதிகாலைதான் தன் வீட்டில் இருந்து கிளம்புவார். இப்படி தன் வீட்டிலும், நண்பர்கள் வீட்டிலும் இருந்த ஆவணங்களை தனக்கு நெருக்கமான சேக்கோ ஃபேக்டரி புள்ளிகளிடம் கொடுத்து ‘பாதுகாத்து’ விட்டார் என்கிறார்கள் சேலம் வட்டாரங்களில்
இந்த ரெய்டுக்காக அக்டோபர் 21 ஆம் தேதி இரவு திருவண்ணாமலை மாவட்ட விஜிலென்ஸ் டி.எஸ்பி. மதியழகன் தலைமையில் போலீசார் சேலத்தில் லேண்ட் ஆனார்கள். அவர்கள் சேலம் வரும் அதேநேரம் புத்திரகவுண்டன் பாளையத்தில் உள்ள தனது வீட்டைப் பூட்டிவிட்டு ஆத்தூரில் இருக்கும் தனக்கும் எடப்பாடிக்கும் நெருக்கமான ஒரு டாக்டரின் வீட்டுக்குப் போய்விட்டார். காலை 11 மணி வரை அந்த டாக்டர் நண்பரின் வீட்டிலேயே இருந்திருக்கிறார் இளங்கோவன்.
ஆனால் காலை 6 மணிக்கெல்லாம் புத்திரகவுண்டன் பாளையத்திலுள்ள இளங்கோவன் வீட்டுக்கு விஜிலென்ஸ் போலீஸார் வந்துவிட்டனர். வீடு பூட்டிக் கிடக்கிறது. அந்த வீட்டில் அனைத்து கதவுகளும் சென்சார் பொருத்தப்பட்டவை. இளங்கோவன் கை ரேகை இருந்தால்தான் திறக்கும். போலீஸார் இளங்கோவனுக்காக காத்திருந்தார்கள்.
நேற்று காலை 11 மணிக்கு ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி சென்ற இளங்கோவன், சென்னையில் இருந்து வருவதாக சொல்லி கள்ளக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு தனது வீட்டுக்கு வந்து தன் கைரேகை பதித்து கதவுகளைத் திறந்துள்ளார். அதன் பிறகே அவரது வீட்டில் ரெய்டு நடந்தது. இரவோடு இரவாக இளங்கோவன் சென்றபோது என்னென்ன எடுத்துச் சென்றார் என்பது பற்றிய விசாரணையும் அவரிடம் நடந்திருக்கிறது.
ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவதற்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்ததும் சென்னையில் இருந்து உடனடியாக இளங்கோவன் சேலம் விரைந்து வந்தார் என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால் சேலத்தில் விஜிலென்ஸ் இறங்கியதுமே இரவோடு இரவாக ஆத்தூர் சென்ற இளங்கோவன் அங்கிருந்து தனக்கு வேண்டப்பட்டவர்களை எல்லாம் எச்சரித்து சில முன்னேற்பாடுகளை செய்ததாக சொல்கிறார்கள்.
இந்த சோதனைகள் மூலம் 21 கிலோ தங்கம், 29 லட்சம் ரூபாய் ரொக்கம், 10 சொகுசு கார்கள், பல வங்கி ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவிக்கிறது. நேற்று இரவும் சோதனைகள் தொடர்ந்துகொண்டிருந்தன.
இதேநேரம் கொடநாடு வழக்கில் விபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுனர் கனகராஜ் குடும்பத்தினரிடம் நேற்று போலீஸார் விசாரணையைத் தொடங்கிய நிலையில் ஒரே நேரத்தில் எடப்பாடிக்கு இரு திசைகளில் இருந்து நெருக்கடி முற்றியிருக்கிறது.
**-வேந்தன்**
.�,