மாஸ்டர் திரைப்படத்தை ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கும், தியேட்டர்களில் நூறு சதவிகித பார்வையாளர்களை அனுமதித்ததற்கும் நன்றி சொல்லி விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க இருக்கிறார் விஜய்.
கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த தியேட்டர்களுக்கு படிப்படியாகப் பலவிதமான கட்டுப்பாடுகளுடன் 50 சதவிகிதம் இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியது தமிழக அரசு. இந்த நடைமுறை ஜனவரி 31ஆம் தேதி வரையில் நீடிக்கும் என்ற ஆணையும் வெளியிட்டிருந்தது.
இதற்கிடையே மாஸ்டர் பட ரிலீஸ் ஏற்கனவே மிகவும் தாமதமாகிவிட்டது. ஓடிடி போன்ற தளங்களில் வெளியாவதை விட தியேட்டர்களில் வெளியாவதே விஜய்யின் மாஸுக்கு பொருத்தமாக இருக்கும் என்று காத்திருந்தது படக் குழு. அதிக முதலீடு செய்யப்பட்ட படம் என்பதும் இதற்கு முக்கியக்காரணம்.
இந்நிலையில்தான் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ , லலித்குமார் இருவரும் விஜய்யிடம் ஆலோசித்துள்ளனர். “நீங்கள் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைத்தால் நிச்சயம் உதவுவார். அதற்காக நாங்களும் அமைச்சர் வேலுமணியிடம் பேசுகிறோம்” என்று கூறியுள்ளனர். ஆனாலும் யோசித்தவர் சில நாட்களுக்குப் பிறகு சரி என்று முதல்வரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டார். இந்தப் பின்னணியில்தான் கடந்த 27ஆம் தேதி இரவு நேரத்தில் முதல்வர் வீட்டில் சந்திக்க அனுமதியும் கிடைத்தது.
கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்ற விஜய் பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் முதல்வரைச் சந்தித்தார் விஜய். பொக்கே, நலம் விசாரிப்புகளுக்குப் பின் மாஸ்டர் படம் ரிலீஸ் பற்றியும், 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கொடுக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளார் விஜய்.
அப்போது முதல்வர், “நம்ம ஆட்சியில தமிழ்த் திரை உலகினருக்கு நல்லதுதான் செய்துவர்றோம். நீங்க கேட்கும் நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றிவருகிறோம். இந்த ஆட்சிக்கு நீங்க என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று சிரிப்புடன் கேட்டுள்ளார் முதல்வர். “ உங்கள் பணிகள் சிறப்பாகத்தான் இருக்கிறது நல்லதே நடக்கும்” என்று பதில் சொல்லியுள்ளார் விஜய். மீண்டும் முதல்வர், “ அந்த படத்தில் ஏதோ சில டயலாக் வருவதா சொல்கிறார்கள், அது இருக்கணுமானு பாத்துக்கங்க” என்று கூறியுள்ளார். அதை டைரக்டரிடம் பேசி சரிசெய்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.
இந்த சந்திப்புக்குப் பிறகுதான்… கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து பரவிவரும் நேரத்திலும், திரை உலகினருக்கு உதவும் வகையில் விஜய் கோரிக்கையை ஏற்று 100% சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார் முதல்வர்.
தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளரும் சேலம் மண்டலத் தலைவருமான டிஎன்சி இளங்கோவிடம் பேசினோம். “முதலில் முதல்வருக்கும் நடிகர் விஜய்க்கும் நன்றி சொல்லிவிடுகிறேன். மாஸ்டர் படம் ரிலீஸ் செய்வதற்கு 1150 தியேட்டர்களில் 850 தியேட்டர்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தியேட்டர்களை தயார் செய்துவருகிறோம். ஆயிரம் தியேட்டர்களில் மாஸ்டர் படம் ஓடும். மேலும் வழக்கமாக வரும் வசூலில் 70% தயாரிப்பாளர்களும், 30% சதவிகிதம் தியேட்டர் உரிமையாளர்களும் பகிர்ந்துகொள்வோம். மாஸ்டர் படத்துக்காக தயாரிப்பாளர்களுக்கு 10% சதவீதம் கூடுதலாக 80% சதவிகிதம் கொடுக்க முடிவுசெய்து தெரியப்படுத்தியுள்ளோம்” என்றார்.
இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மாஸ்டர் படக் குழுவின் சார்பில் செய்தித் தாள்களில் வண்ண விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
மாஸ்டர் படத்துக்காக தமிழக அரசு செய்த உதவிக்கு விஜய்யின் கைமாறு விளம்பரத்தோடு நின்றுவிடப் போகிறதா என்று விஜய் மக்கள் இயக்க வட்டாரங்களில் பேசினோம்.
“விஜய் மக்கள் இயக்கத் தலைமை, மாவட்ட நிர்வாகிகளை இந்த வாரம் கடைசியில் அழைக்கவுள்ளது. அவர்களிடம் மாஸ்டர் பட ஸ்டிக்கர், போஸ்டர்களை கொடுக்கவிருக்கிறார்கள். அப்போது அரசியல் ரீதியாக சில அட்வைஸ்களையும் கொடுக்க இருக்கிறார் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்.. விளம்பரம் கொடுத்த விஜய் விரைவில் தமிழக முதல்வரையும் சந்தித்து நன்றி சொல்லக் காத்திருக்கிறார்” என்றும் கூறுகிறார்கள்.
எடப்பாடி எதிர்பார்ப்பதை செய்வாரா விஜய்,என்ற கேள்வி சஸ்பென்சாக ஓடிக்கொண்டிருக்கிறது விஜய் மக்கள் இயக்க வட்டாரத்தில்.
**வணங்காமுடி**
�,