வன்னியர் நீதிபதிகள்: அன்புமணி சொல்லி நியமிக்கப்பட்டார்களா?

Published On:

| By Balaji

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை பாமகவின் அன்புமணி சந்தித்ததால் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதியானார்கள் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் செய்தி நீதித் துறை வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (ஜனவரி 12) ராமதாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்…

“ சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் இருந்தால் அது பெரும் செய்தி. ஒரே நேரத்தில் இருவர் இருந்தால் அது அதிசயம். அந்த அளவுக்கு தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வந்தது.

1983-ஆம் ஆண்டில் தான் முதன்முதலில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.கே.எம்.நடராசன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் கடந்த 37 ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 13 பேர் மட்டுமே நியமிக்கப் பட்டனர். ஆனால், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பணியாற்றினர். இது ஓர் அதிசயம்”என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ்,

“இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது தெரியுமா?”என்று கேட்டு அதற்கு பதிலையும் தானே அளித்துள்ளார்.

“ 2014ஆம் ஆண்டில் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் மூத்த மகள் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அதற்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காக அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சந்தித்தார்.

அப்போது தமிழ்நாட்டில் வன்னியர் சமுதாயத்தின் கடந்த கால வரலாறு குறித்தும், அவர்களின் இன்றைய சமூக பொருளாதார நிலை குறித்தும் தலைமை நீதிபதி அவர்களிடம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விரிவாக விளக்கினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 152 கால வரலாற்றில் மொத்தம் 8 பேர் மட்டுமே வன்னியர் சமுதாயத்தில் இருந்து நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார்.

அன்புமணி இராமதாஸ் அவர்களின் இந்த விளக்கமும், புள்ளிவிவரங்களும், அதை அவர் எடுத்துக் கூறிய விதமும் தலைமை நீதிபதி கவுல் அவர்களிடம் ஒருவிதமான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

அதன்பயனாக அவரது பதவிக்காலத்தில் மாவட்ட நீதிபதிகள் நிலையிலிருந்து பதவி உயர்வின் மூலம் பொன். கலையரசன், டீக்காராமன், இராஜமாணிக்கம் ஆகியோரையும், வழக்கறிஞர்களில் இருந்து பி.டி. ஆதிகேசவலு, இளந்திரையன் ஆகியோரையும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தார்.

அவர்களில் பி.டி. ஆதிகேசவலு, இளந்திரையன் ஆகிய இருவரும் முறையே 46, 48 வயதில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். அதனால் அவர்கள் இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. அவ்வாறு நியமிக்கப்பட்டால் வன்னியர் சமுதாயத்திலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படும் முதல் இருவர் என்ற பெருமை இவர்களுக்கு கிடைக்கும்.

இந்த தகவல்களையெல்லாம் நமக்கு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளராகவும், உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற பொன்.கலையரசன் தான். அண்மையில் நடைபெற்ற நீதியரசர் கே.எம். நடராஜன் அவர்களின் திருவுருவப் படத் திறப்பு விழாவில் உரையாற்றும் போது தான் அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்த வன்னியர்களின் சமூக, கல்வி நிலை குறித்த உண்மைகளைப் புரிந்து கொண்டு நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கிய அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், இப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதியுமான சஞ்சய் கிஷன் கவுல் எப்போதும் நமது நன்றிகளுக்கும், பாராட்டுகளுக்கும் உரியவராவார்”என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share