தஞ்சை பள்ளி மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்ட தஞ்சை மாணவி விவகாரத்தில் மதமாற்றம்தான் காரணம் என்று ஆரம்பத்திலிருந்தே பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இதை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை பாஜகவினர் நடத்தி வருகின்றனர். கடந்த 22ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே சொன்னபடி, இன்று(ஜனவரி 25) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள இந்த போராட்டத்தில் மாணவியின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிவரை நடைபெறுகிற உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பொதுசெயலாளர் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, குஷ்பு, கராத்தே தியாகராஜன், வினோஜ் செல்வம், மீனவர் அணி சதீஸ்குமார், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,”மாணவி விவகாரத்தில், மதமாற்றத்துக்கு யாருமே மாணவியை வற்புறுத்தவில்லை என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பேட்டி கொடுக்கிறார். மற்றொரு பக்கம், இந்த சம்பவத்தை மூடி மறைப்பதற்கு ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று உண்மையாக போராடுவது பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. இதில் அரசியல் செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
மருத்துவமனையில் இருக்கின்றபோது எடுக்கப்பட்ட வீடியோவில் மாணவி பேசும் போது, தான் ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்பதை தெளிவாக சொல்கிறார். தன்னை எப்படியெல்லாம் பள்ளி கஷ்டப்படுத்தியது என்பதையும் கூறியுள்ளார். இதை பார்த்துவிட்டு தமிழ் சமூகம் எப்படி சும்மா இருக்கும். அதனால்தான், அரசின் வழிகாட்டு முறைகளை மீறி இன்றைக்கு இத்தனை பேர் இங்கே கூடியிருக்கிறோம். நம்முடைய போராட்டம் எந்த மதத்திற்கும், எந்த பள்ளிக்கும் எதிரானது அல்ல.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்ததிலிருந்து கடந்த எட்டு மாதங்களில் ஒவ்வொரு தமிழனும் ஒரு விஷயத்தை தெளிவாக உணர்ந்துள்ளார்கள். அது, இந்த அரசு மதசார்பற்ற அரசு கிடையாது என்பதுதான். கடந்த எட்டு மாதங்களில் 160க்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இப்படி இருக்கையில் இந்த அரசு மதசார்பற்ற அரசு என்பதில் எப்படி நம்பிக்கை வரும்” என்று கூறினார்.
மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பான பல கோரிக்கைகளை முன்வைத்து பேசிய அவர்,” முதலில் மாணவி குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த இரண்டு வருட காலமாக மாணவி படித்த பள்ளியில் என்ன நடந்தது? எதற்காக இந்த அலட்சியம்? அரசு உதவிபெறும் பள்ளியில் இப்படி நடந்தது ஏன்? இதற்கு பின்னாடி யார் இருக்கிறார்கள்? ஆகியவை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு முழு பாதுகாப்பு கொடுப்பது தமிழ்நாடு அரசின் பொறுப்பு. இதுதான் எங்களது கோரிக்கை. இதை அரசு நிறைவேற்ற வேண்டும்.
உண்ணாவிரத போராட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் செல்ல போகிறோம். மாணவிக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்.
இங்கிருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கிறேன். தயவுசெய்து, நீங்கள் மத அரசியல் செய்யாதீர்கள். மத அரசியலிலிருந்து வெளியே வந்து, நீங்கள் மதசார்பற்ற அரசை நடத்தி வருகிறீர்கள் என்பதை தெளிவுப்படுத்த வேண்டுமென்றால், மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையாக விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிக்கு நீதி கேட்டு இன்று உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.
**-வினிதா**
�,”