தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூர் மண்டல முதன்மை சுற்றுச் சூழல் இணைப் பொறியாளராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். தர்மபுரி, திருவண்ணாமலை, ஓசூர், வாணியம்பாடி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய ஆறு மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு பொறுப்பாளரான இவரிடம்தான், மாசு கட்டுப்பாடு தொடர்பாக நிறுவனங்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்குவதற்கான அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில் வேலூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான குழுவினர் காட்பாடி விருதம்பட்டு, முனிசிபல் காலனியிலுள்ள பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வமற்ற அலுவலகத்தில் கடந்த 13ஆம் தேதி திடீரென சோதனை நடத்தினர்.
மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் கோப்புகள் மீது கையெழுத்திட லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடந்துள்ளது. அவரின் கார் உள்ளிட்ட இடங்களில் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் ரூ. 33.73 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. லஞ்சம் வசூலிப்பதற்காகவே ரூ. 8,000 மாத வாடகைக்கு இந்த இடத்தை எடுத்திருக்கிறார் பன்னீர்செல்வம் என்கிறார்கள் லஞ்சம் ஒழிப்புத் துறை வட்டாரங்கள்.
இதனைத் தொடர்ந்து, ராணிப்பேட்டையிலுள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம், தங்கம், வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. “இணைப் பொறியாளர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ. 3.25 கோடி ரொக்கப் பணம், 450 சவரன் தங்கம் மற்றும் 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரொக்கப் பணத்தை எண்ண இயந்திரங்கள் வரவைக்கப்பட்டன” என்று லஞ்ச ஒழிப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரெய்டு பற்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்களில் விசாரித்தோம்… “சாதாரணமாக துறையின் ஆய்வாளர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் இடங்களை மாவட்ட அதிகாரிகளே நேரடியாக சென்று சோதனை செய்துவிடுவார்கள். அரசின் உயரிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் வீடுகளுக்கு சோதனையிட செல்வதற்கு முன்பாக லஞ்ச ஒழிப்புத் துறை மூத்த அதிகாரிகள் முதல்வர் அலுவலகத்தில் அனுமதி கேட்பது தெரிவிப்பது வழக்கம்.
சுற்றுச் சூழல் துறை இணைப் பொறியாளரான பன்னீர்செல்வத்தின் இடங்களை சோதனையிட அத்தகையை அனுமதி வாங்கத் தேவையில்லை. ஆனாலும், இந்தத் தகவலை முதல்வர் அலுவலகத்துக்குத் தெரிவித்து, அனுமதி வாங்கிய பிறகே ரெய்டு நடத்தியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை. 6 மாவட்டங்களில் இணைப் பொறியாளரின் சுற்றுச் சூழல் அனுமதி கிடைக்காமல் தொழில் தொடங்க முடியாது. ஆகவே, இதுபோன்ற முக்கிய பதவிகள் துறை ரீதியான முக்கிய புள்ளிகளை கவனித்த பிறகே கிடைத்திருக்கும்.
இந்த நிலையில் தனக்குக் கூட சொல்லாமல் தனது துறை சார்ந்த அதிகாரி வீட்டில் ரெய்டு நடத்தியதால், சுற்றுச் சூழல் துறை அமைச்சரான கருப்பணன் கவலையில் இருக்கிறார்” என்கிறார்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்களில்.
**எழில்**�,