தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் தைப்பூச தினத்துக்கு பொது விடுமுறை என்று தெரிவித்திருந்தார். இது தமிழகமெங்கும் உள்ள முருக பக்தர்களை பெரும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
இதுவரைக்கும் மலேசியா போன்ற வெளிநாடுகளில் தான் தைப்பூச தினத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தைப்பூச விடுமுறை என்பதை முருக பக்தர்கள் பெரிதும் வரவேற்றனர்.
இதே நேரம் தைப்பூச விடுமுறை குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்,
“நான் முதன் முதலில் வேலெடுத்து தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கேட்டபோது எல்லோரும் சிரித்தனர். இன்று எனது கோரிக்கையை தான் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
இதேபோல தமிழக பாஜக தலைவர் முருகன், “நாங்கள் வேல் யாத்திரை நடத்திய பிறகுதான் அரசின் கவனம் தைப்பூசம் பக்கம் திரும்பி உள்ளது” என்று தனக்கும் பங்கு போட்டுக் கொண்டார்.
இதையெல்லாம் பார்த்து சிரிக்கிற எடப்பாடி சட்டமன்ற தொகுதி மக்கள் இந்த தைப்பூச விடுமுறைக்கு நாங்கள்தான் காரணம் என்று கூறுகிறார்கள். எப்படி என்று எடப்பாடி வட்டாரத்தில் விசாரித்தோம்.
“எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த பர்வதராஜகுலம் என்ற பிரிவு மக்கள் வசிக்கிறார்கள். எடப்பாடி நகரத்தில் இந்த சமூக மக்கள் அடர்த்தியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு பாரம்பெரிய பெருமை உண்டு.அதாவது பழனிமலையில் வருடா வருடம் தைப்பூசத்துக்காக காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்று அங்கே பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியை நீண்ட நெடுங்கலமாக செய்தவர்கள் எடப்பாடியை சேர்ந்த பர்வதராஜகுல மக்கள்தான்.
மேலும் பழனிமலையில் ஒரு இரவு தங்கி முருகனுக்கு சேவைகள் செய்யும் பாரம்பரிய உரிமையும் பர்வதராஜகுல மக்களுக்கே உள்ளது. பழனியின் செப்புப் பட்டயத்திலேயே இதற்கான கட்டளைகள் எழுதப்பட்டுள்ளன. அதன்படி எடப்பாடி பகுதியில் இருந்து ஒவ்வொரு தைப்பூசத்துக்கும் பர்வதராஜகுல மக்கள் திரண்டு பழனிக்கு சென்று வழிபாடு நடத்தி வருவோம்.
எங்களின் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் முதல்வர் பழனிசாமியும் முருக பக்தர்தான்.தன் வீட்டுக்கு அருகிலேயே முருகன் கோயிலை கட்டியிருக்கிறார். இந்நிலையில் தைப்பூசத்துக்கு விடுமுறை அளித்ததன் மூலம் இந்த தொகுதியில் இருக்கும் பர்வதராஜகுலத்து மக்களின் வாக்கும் அவருக்கே செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள்.
தைப்பூச விடுமுறை அறிவிப்புக்குக் காரணம் சீமானா, எல். முருகனா அல்லது எடப்பாடி நகரத்தில் வசிக்கும் சுமார் பதினைந்தாயிரம் பர்வதராஜகுல வாக்காளர்களா என்று வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
**-வேந்தன்**
�,