திமுக அரசு கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இன்று வரைக்கும் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு அடுத்தடுத்த நிலைகளில் இருக்கும் நிர்வாகிகளின் ஒட்டுமொத்த குரல், ‘என்னங்க ஆட்சி அமைச்சு என்ன பண்றது? கட்சிக்காரங்களுக்கு எதுவுமே செய்யலை’ என்பதுதான்.
‘எதுவுமே செய்யலை’ என்றால் கடந்த பத்து வருடங்களாக அதிமுகவினர் ஆட்சியில் அக்கட்சியின் நிர்வாகிகள் சம்பாதித்தது போல், இன்னும் நாங்கள் சம்பாதிக்கத் தொடங்கவில்லை என்பதுதான் கிரவுண்ட் அரசியல் அகராதியில் இதற்கு அர்த்தம்.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு முழுதும் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் கூடிய பார்களை டெண்டர் எடுப்பதற்கான அறிவிப்பு டிசம்பரில் வெளியானது. ‘அப்பாடா…. நாம சம்பாதிக்க நல்ல நேரம் வந்துடுச்சு’ என்று திமுகவின் பல நிர்வாகிகளும் தத்தமது பகுதிகளில் டாஸ்மாக் பார்களை கைப்பற்றுவதற்கான கோதாவில் குதித்தனர்.
ஆனால், இந்த பார்கள் விவகாரத்தில் ஒரு திருப்பம் ஏற்படும் என்று திமுகவினர் எதிர்பார்த்திருக்கவில்லை. பார்களை கைப்பற்ற நினைத்த திமுகவினருக்குத் தற்போது இதில் நடந்துவரும் மாற்றங்கள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
என்ன மாற்றம்? என்ன ஏமாற்றம்? கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி சுமார் 5,400 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. அனைத்து கடைகளுக்கும் பார் வசதி இல்லை. செப்டம்பர் 2021 புள்ளி விவரப்படி தமிழகத்தில் 2,808 பார்கள் இருக்கின்றன. இந்த பார்களுக்கான உரிமத்தை 2011 அதிமுக ஆட்சி அமைத்ததில் இருந்து, பெரும்பாலும் அதிமுகவினரே பெற்று வந்திருக்கிறார்கள்.
டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு பாருக்குள் நுழைந்தாலே, ‘வெளி உணவு அனுமதி இல்லை’ என்பதுதான் முதல் அறிவிப்பாக இருக்கும். வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் கப், சுண்டல், கடலை பாக்கெட் முதல் சிக்கன், மட்டன் வரையிலான சைடிஷ் அனைத்தும் குடிபிரியர் அந்த பாரில்தான் வாங்க வேண்டும். அதுவும் அவர்கள் சொல்லும் விலைக்குத்தான் வாங்க வேண்டும். அதுமட்டுமல்ல, காலி மது பாட்டில்களும் பார் உரிமையாளருக்கே சொந்தம். இப்படியாக கடந்த பத்து வருடங்களில் பார்கள் பாடாவதியாக இருந்தாலும், அவற்றின் மூலம் கிடைத்த பல மடங்கு வருமானத்தில் அன்றைய ஆளுங்கட்சியினர் கொழித்துவிட்டார்கள்.
அதனால்தான் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மாசெக்கள் முதல் பல நிர்வாகிகளுக்கும் பார்கள் மீது ஒரு கண் தொடர்ந்துகொண்டிருந்தது. வருமானம் மட்டுமல்ல, அந்தந்த ஏரியாவில் அதிகாரத்தின் அடையாளமாகவும் பார் உரிமம் இருக்கிறது. அதனால் வருமானமும் அதிகார பலமும் இணையும் இடமாகவே இந்த பார் ஏலம் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள பார்களின் உரிம காலம் இரு வருடங்கள். பல பார்களில் கடந்த வருடமே உரிமம் முடிந்துவிட்டது. ஆனால், கொரோனா காரணமாக கடந்த வருடம் பல மாதங்கள் டாஸ்மாக் கடைகள் மூடியே கிடந்ததால், பார்களின் உரிமப் புதுப்பிப்பு நடவடிக்கைகளும் தாமதமாகின. மேலும் கணிசமான பார்கள் 2021 வரை உரிமம் பெற்றிருந்தன. இந்த பார் உரிமம் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மூலமாகவே வழங்கப்படும்.
ஆட்சி மாறி ஏழு மாதங்கள் முடிவுற்ற நிலையில்… தமிழகம் முழுதும் உள்ள டாஸ்மாக் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் டாஸ்மாக் மது பார்களில் உணவுப் பொருள் விற்பது, காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான டெண்டர் விடும் பணி டிசம்பர் மாதம் மத்தியில் தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து ஒரு சில பார் உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.கடந்த உரிம காலத்தில் முக்கால்வாசி ஊரடங்கில் போய்விட்டதால் நட்டம் அடைந்துவிட்டோம், அதனால் மீண்டும் உரிமம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 3) விசாரணைக்கு வருகிறது.
இது போன்ற சில தனிப்பட்ட பார்கள் வழக்குக்கு ஆளானாலும்… 2022 ஜனவரி 1 முதல் 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரைக்குமான இந்த உரிமத்துக்காக கடுமையான போட்டி நிலவியது. டாஸ்மாக் பார் டெண்டர் விண்ணப்பத்தின் விலை வெளியே வெறும் 525 ரூபாய்தான். ஆனால் உள்ளுக்குள் இதன் விலையே தனி.
குறிப்பிட்ட டாஸ்மாக் கடையின் மது விற்பனையில் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கட்டணமாக செலுத்த வேண்டும், அது தவிர ஆளுங்கட்சியின் மேலிடம் வரை கடைக்கு இத்தனை லட்சம் என்று கொடுக்க வேண்டும். அதை மீறிதான் லாபம் பார்க்க வேண்டும். அதனால்தான் பாருக்குள் சைடிஷ்கள் எல்லாம் அறிவிக்கப்படாத விலையேற்றத்தை அடிக்கடி சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
இப்போது கடந்த 30ஆம் தேதி வரை மதுக்கடை பார்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட இடங்களில், திமுகவினர் மொத்தமாக விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் கிடைத்த தகவல் அவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.
“பல மாவட்டங்களில் திமுகவினரின் பார் விண்ணப்பங்கள் ஏற்கப்படவே இல்லை. ஏற்கனவே நடத்தி வரும் அதிமுகவைச் சேர்ந்தவர்களிடமே பார்கள் தொடருவதற்காக பெருந்தொகை அவர்களிடமே வசூலிக்கப்படுகிறது. திமுகவினருக்குக் கொடுத்தால் கடுமையான கோஷ்டிப் பூசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கட்சி மேலிடத்தில் சொல்லி, டாஸ்மாக் துறையை நிர்வாகிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியே, இந்த ஏற்பாட்டை செய்து முடித்துவிட்டார்” என்று குமுறுகிறார் வடமாவட்ட திமுகவில் பார் விண்ணப்பம் போட்ட திமுக இடைநிலை நிர்வாகி.
மாவட்டச் செயலாளர்களுக்கும் கீழே இருக்கும் சில நிர்வாகிகள், “பார்களை பூரா இப்ப வச்சிருக்கும் அதிமுகவினரே வச்சிருக்கப் போறாங்களாம்” என்று குமுறிக்கொண்டிருக்க இதன் பின்னால் இன்னொரு மாஸ்டர் பிளான் இருக்கிறது என்கிறார்கள் உயர்நிலை நிர்வாகிகள்.
அது என்ன மாஸ்டர் பிளான்?
“டாஸ்மாக் கடைகள் தனியார் இடங்களில் உள்ளது, குறிப்பாக பெரும்பாலும் அதிமுக வினர் இடத்தில்தான் உள்ளது, கடைகளை ஒட்டியபடி உள்ள அவர்கள் இடத்தில் பார் லைசன்ஸ் பெற்று பார் ஏலம் எடுத்து நடத்தி வருகின்றனர். ஆட்சிமாறி விட்டது என்பதற்காக அவர்கள் லைசென்ஸ் உள்ள பில்டிங்குகளை திமுகவினருக்கு விட்டுக்கொடுக்க மறுப்பார்கள். இதற்காகத்தான் இன்னொரு ஏற்பாட்டில் இறங்கியுள்ளது ஆட்சி மேலிடம்.
அதாவது இப்போது பார் நடத்தி வருபவர்களே கடந்த ஒன்றரை வருடங்களாக லாபம் இல்லாமல்தான் நடத்தி வருகிறார்கள். காரணம் கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டன. அதனால் பார்களும் மூடப்பட்டன. வெகு சொற்பமான பார்களில் ஊரடங்கு நேரத்திலும் சரக்கு ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், அதையும் ஊரடங்கு கால விற்பனையில் அஃபிசியலாக காட்ட முடியாது. தவிர சைடிஷ்கள் மூலம் பெரும் வருமானம் அப்போது கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் தற்போது பார் நடத்தி வருபவர்கள் மேற்கொண்டும் தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்கு கட்டணங்களை ஏற்றி, விதிமுறைகளையும் கடுமையாக்கியிருக்கிறார்கள். உதாரணமாக கடலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் பார் கடந்த முறை 1.25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. தற்போது சுமார் 2.20 லட்சத்துக்கு அந்த பாருக்கு விலை நிர்ணயம் செய்துள்ளனர். இதேபோல பல பார்களின் உரிமத் தொகையை நூறு மடங்கு ஏற்றியிருக்கிறார்கள் டாஸ்மாக் நிர்வாகத்தினர். மேலும் பல சட்டத் திட்டங்களை மாற்றுவதால் அவர்களே முன் வந்து விட்டுக் கொடுப்பது போல் நெருக்கடிகளை உருவாகி வருகிறார்கள்.
இதற்கு பின்னால் இருக்கும் திட்டம்தான் மாஸ்டர் பிளான். அதாவது மாநிலம் முழுமைக்கும் அனைத்து பார்களையும் ஒன்று அல்லது அல்லது ஓரிரு நிறுவனங்களுக்கு விடுவது. அந்த நிறுவனங்கள் மொத்தமாக அனைத்து பார்களையும் தங்களுக்குத் தோதானவர்கள் மூலம் நடத்திக் கொள்வது. இதன் மூலம் கட்சி நிதி பெரும் அளவில் வரும். கட்சிக்காரர்களுக்கு நிதி எந்த அளவுக்கு போகும் என்று தெரியாது.
உதாரணமாக திருப்பூரில் இருக்கும் அனைத்து பார்களையும் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெரும் புள்ளி எடுத்திருப்பதாக திருப்பூர் திமுக முழுதும் பேச்சாக உள்ளது. அவர் திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமல்ல, இன்னும் பல மாவட்ட பார்களையும் எடுத்திருப்பதாகவும் திமுகவினர் மத்தியிலேயே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. கல்லணையை கட்டிய மன்னன் பெயரைக் கொண்ட அந்த புள்ளி, கடந்த ஆட்சிகளில் பணம் ’அள்ளும்’ வேறு ஒரு பிசினஸில் கொடிகட்டிப் பறந்தவர். அவர் இப்போது டாஸ்மாக் பார்களுக்கு மொத்த ஏலம் எடுத்து, தன் விருப்பத்துக்கு மாவட்டத்துக்கு மாவட்டம் ஆள் போட்டுக் கொள்வார் என்று சொல்லப்படுகிறது.
இதேபோல சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகர பார்களை வேறொரு தமிழக தொழிலதிபர் கைப்பற்ற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பல மாநிலங்களில் வேறு தொழில் செய்யும் இந்த அதிபர் மாநகர பார்களை குறிவைத்து நவீன வடிவில் பார்களை மாற்றத் திட்டமிட்டிருக்கிறாராம். டாஸ்மாக் பார் என்றாலே கலீஜ் என்ற பிம்பத்தை மாற்றி மெட்ரோபாலிட்டன் எலைட் பார்களை போல அனைத்து பார்களையும் மாற்றத் திட்டமிட்டுள்ளார் அவர். அதற்காக அதிக கட்டணங்களையும் அவர் வசூலிக்கக் கூடும்.
தமிழகம் முழுதும் இந்தத் தொழிலதிபர்கள்தான் பார்களை இனி கன்ட்ரோல் செய்வார்கள். இந்த விவகாரத்தில் ஆட்சி மேலிடத்துடனான பரிமாற்றங்களை இவர்களே கவனித்துக் கொள்வார்கள். இவர்களுக்குக் கீழே மாவட்டம் தோறும் பார்கள் இயங்கும். அதை அவர்கள் நினைத்தால் இப்போது வைத்திருப்பவர்களிடமே கொடுக்கலாம் அல்லது திமுகவினரிடமும் கொடுக்கலாம். அவர்களுக்கு திமுக, அதிமுக என்ற வித்தியாசம் இருக்கப் போவதில்லை. பணமே பிரதானம்.
இதுதான் தற்போது மதுக்கடை பார்களுக்கான் மாஸ்டர் பிளான். இந்த மாஸ்டர் பிளானை அறிந்து பல திமுக மாசெக்கள், அமைச்சர்களே அதிர்ச்சியில் மூர்ச்சையாகியிருக்கிறார்கள்.
ஏற்கனவே மதுபான கம்பெனிகள் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கத்தை கத்தையாக கொடுத்துவிடுகிறார்கள். இந்த நிலையில் பார்களையாவது கட்சியின் இடைநிலை நிர்வாகிகளுக்குக் கொடுத்தால்தான் ஆங்காங்கே கட்சிப் பணிகளுக்கான பணத்தைக் கறந்துகொள்ள முடியும். பத்து வருடங்கள் எதிர்க்கட்சியாகவே இருந்து செலவழித்த கட்சியினரும் கொஞ்சம் காசு பார்ப்பார்கள். ஆனால் கட்சியின் இடைநிலை, கீழ்நிலை நிர்வாகிகளுக்கு கிடைக்கும் பார் பணத்திலும் கை வைக்க நினைத்தால் என்ன ஆவது?” என்று முழு பின்னணியையும் சொல்லி முடித்தார்கள்.
தமிழகம் முழுதும் மதுபான பார்களை ஒரே அல்லது ஒரு சில நெட்வொர்க்குக்குள் கொண்டுவருவது என்கிற மாஸ்டர் பிளானை நோக்கித்தான் வேக வேகமாக நகர்கிறது டாஸ்மாக்.
**-வேந்தன், வணங்காமுடி**
�,