கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இந்தியாவில் பரவி வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் மட்டும் ஆக்ஸிஜன் இல்லாததால் கடந்த 24 மணி நேரத்தில் 25 கொரோனா நோயாளிகள் இறந்தது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த மே 22 -2018 துப்பாக்கிச் சூட்டை அடுத்து மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. “இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், எங்கள் ஸ்டெர்லைட் ஆலை சார்பாக ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும். நாங்கள் ஒருநாளைக்கு 500 மெட்ரிக் டன் வரையில் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும். அதற்கு அனுமதி வழங்க வேண்டும்”என்று வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, ‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாம்’ என்று மத்திய அரசு சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு சார்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து வழக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று காலை 11 மணியளவில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுகுறித்து மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்த மாநில அரசு முடிவு செய்தது.
அதன்படி இன்று (ஏப்ரல் 23) காலை 8 மணிக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் கலெக்டர் செந்தில்குமார் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், சமூக அமைப்புகளின் தன்னார்வலர்களும் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களாகவே இருந்தனர். அதேநேரம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் போய்விட்டதாக தொடர்ந்து குமுறி வரும் லாரி கான்ட்ராக்டர்கள், லாரி தொழில் செய்பவர்கள் ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் தயாரிக்க ஆதரவு தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் செல்வத்திடம் பேசினோம். “அரசு அலுவலகங்கள் அரசு நிகழ்ச்சிகள் காலை 10 மணிக்கு துவங்குவதுதான் வழக்கம். ஆனால் காலை 8 மணிக்கே அரசு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது வியப்பாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள சுமார் ஆயிரம் பேர் திரண்டபோதும் மிக மிக குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு உத்தரவு போட்டது யார்?, முதல்வரா, தலைமைச் செயலாளரா என்று கலெக்டரிடம் கேள்வி கேட்டேன். ஆனால் அதற்கு அவரிடம் பதில் இல்லை. ஒருகட்டத்தில் ஸ்டெர்லைட்டை அரசாங்கமே எடுத்து நடத்தலாமா என்று கலெக்டர் கேட்டார். ஸ்டெர்லைட்டை யார் நடத்தினாலும் வேண்டாம்’ என்று நான் உட்பட பலரும் பதில் சொன்னோம்.
ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் நிறுவனத்தால் மட்டும்தான் முடியுமா? அரசிடம் இருக்கும் சிப்காட் ஆலைகளில் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும். வேண்டுமென்றால் சிப்காட்டிலேயே தனியார் நிறுவனங்களை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யச் சொல்லலாம். ஆனால், அதிகாரிகள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இந்தக் கூட்டத்தில் இருந்து தெரிகிறது” என்றார் செல்வம்.
கூட்டத்தில் ஒரு கட்டத்தில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் தள்ளுமுள்ளு வரை போக எஸ்பி ஜெயக்குமார் அதை விலக்கிவிட்டார். கருத்துக் கேட்புக் கூட்டத்தின் கருத்தை அரசிடம் சொல்வதாகச் சொல்லி கூட்டத்தை ஒரு மணி நேரத்தில் முடித்துவிட்டார் கலெக்டர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் நம்மிடம், “இங்கே பிரச்சினை ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் தாமிரம் தயாரிக்கிறதா இல்லையா என்பது அல்ல. ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் உட்கட்டமைப்பு மூலம் ஆக்ஸிஜன் தயாரித்து தரமுடியும் என்று அந்த நிறுவனம் சொல்கிறது.ஆனால் கண்மூடித்தனமாக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
ஸ்டெர்லைட் தயாரித்துத் தரும் ஆக்ஸிஜன் மூலம் ஏராளமான உயிர்களைக் காப்பாற்ற முடியும். இன்று வட இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள கொடூரம் நாளை தமிழகத்துக்கு வராது என்பதற்கு என்ன நிச்சயம்? ஸ்டெர்லைட் தயாரிக்கும் ஆக்ஸிஜன் என்றால் அது உயிரைக் காப்பாற்றாதா? ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தை எதிர்ப்பது என்ற அடிப்படையிலேயே எல்லாவற்றையும் அணுகுகிறார்கள். வடிவேலு நகைச்சுவையில், ‘வார்டன்னா அடிப்போம்’என்று சொல்லுவார்கள். அதுபோல ஸ்டெர்லைட் என்றால் எதிர்ப்போம் என்பதே அவர்களின் பிழைப்பாக இருக்கிறது. இது மக்களுக்கு செய்யும் துரோகம்” என்கிறார்கள்.
இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு இன்று (ஏப்ரல் 23) பகல் 11 மணியளவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று தமிழக அரசு சார்பில் ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்தது.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பாப்டே, “ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஏன் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் உள்ளது. இந்தியா முழுதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் 1 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூட மிகவும் முக்கியம்” என நீதிபதி தெரிவித்தார்.
மேலும், “ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றி விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கை வரும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
**-ராகவேந்திரா ஆரா**
�,”