பொது இடங்களில் சின்னங்கள் வரைய மாநிலத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மொத்தம் 27 மாவட்டங்களில் 2,31,890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தலுக்கான பல்வேறு நடவடிக்கைகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழக உள்ளாட்சித் தேர்தலைக் கண்காணிக்கப் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற, தேர்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல், சுவரொட்டி ஒட்டுதல் தொடர்பாக சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்று (டிசம்பர் 21) தெரிவித்துள்ளது.
“தமிழ்நாடு திறந்தவெளிகள் (உருக்குலைப்பு தடுப்பு) சட்டம் 1959இன்படி, பார்வையில்படும் பொது இடங்கள் என்பது, ஒரு பொது இடத்தில் இருக்கும் அல்லது கடந்து செல்லும் ஒரு நபரின் பார்வையில்படும் தனியார் இடம் அல்லது கட்டடம் ஆகும்” என்று அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், “இத்தகைய இடங்களில் உரிமையாளரின் அனுமதி இருந்தாலும் சுவரில் எழுதுவதோ அல்லது சுவரொட்டி போன்றவற்றை ஒட்டுவதோ கூடாது. ஓர் இடத்தின் உரிமையாளரின் சம்மதம் பெறப்பட்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில் எந்த சூழ்நிலைகளிலும் சுவரில் எழுதுவதோ அல்லது சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது” என்று எச்சரித்துள்ளது.�,