�பாமகவுக்கு 23 தொகுதிகள் கிடைத்தது எப்படி?- எங்களுக்கும் ஒரு ராமதாஸ் கிடைப்பாரா?

Published On:

| By Balaji

அதிமுக பாமக கூட்டணியில் பாமகவுக்கு 23 சீட்டுகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுத்த பிறகுதான் கூட்டணி பற்றி விவாதிக்கப்படுமென்று டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தாலும்…. உள் ஒதுக்கீடும், தொகுதி ஒதுக்கீடும் ஒரே நேரத்திலேயே பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்றுள்ளன.

பாமகவுக்கு கிடைத்த 23 தொகுதிகளுக்குப் பின்னால் பலத்த விவாதங்கள் நடந்திருக்கின்றன. பாமக பிரதிநிதிகளும் அதிமுக பிரதிநிதிகளும் பேசியபோது 40 தொகுதிகளில் இருந்து ஆரம்பித்துள்ளது பாமக. அதிமுகவின் வெற்றிக்கு வட மாவட்டங்களில் பாமகவின் தயவு தேவை என்பதால் அதிமுக இதை மறுக்காது என்றுதான் எண்ணியிருந்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, 17 தொகுதிகளில் இருந்து ஆரம்பித்துள்ளார்.

அமைச்சர்களுக்கும் பாமக தலைவர்களுக்கும் இடையே நடந்த தொடர் பேச்சுவார்த்தையில், ஏற்கனவே திமுகவுடன் கூட்டணி வைத்தபோது 31 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டதை நினைவுபடுத்திய பாமக, அதே எண்ணிக்கையிலான தொகுதிகளைக் கேட்டது. அதற்கும் கீழே போவது என்றால் இனி பேச வேண்டாம் என்றும் பாமக தரப்பில் கூறிவிட்டனர். அதற்கு பதிலளித்த அதிமுக அமைச்சர்கள், “இல்லைங்க… அப்புறம் அந்தத் தொகுதிகள்ல திமுக ஜெயிக்குற நிலைமை உண்டாயிடும்”என்று மறுத்துவிட்டனர். பின் முதல்வரிடம் பாமக பிரமுகர்கள் பேசிய பிறகு இருபது தொகுதிகளுக்கு இறங்கி வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தத் தகவல் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸிடம் தெரிவிக்கப்பட 28க்கு குறைய மாட்டோம் என்று விடாப் பிடியாக சொல்லிவிட்டார்.

அடுத்தடுத்த பேச்சுகளில் அதிமுக தரப்பில், ‘வேண்டுமானால் 22 தருகிறோம். அதற்கு மேல் தரவே முடியாது’ என்று சொல்லப்பட்டது. 22 இல் இருந்து மாற்றமே இல்லை என்று முதல்வர் தெளிவாக சொல்லிவிட்டார். இதனால் சுமார் ஒரு வாரத்துக்கு பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே நின்றுவிட்டது.

இதன் பிறகு மீண்டும் பாமக தரப்பு கேட்க அப்போதுதான், “கலைஞரிடம் நீங்கள் இட ஒதுக்கீடு கேட்டீர்கள். அவர் நீங்கள் விரும்பியபடி கொடுக்கவில்லை.எங்கள் அம்மாவிடமும் நீங்கள் கேட்டீர்கள். அவர்களும் தரவில்லை. ஆனால் இப்போது நான் உங்களுக்கு இந்த வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ரிஸ்க் எடுத்து தருகிறேன். இதனால் எனக்கே பாதிப்பு வரலாம் என்று பலர் சொல்கிறார்கள். ஆனாலும் அதையெல்லாம் மீறி உங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த நிலையில் இதற்கு மேலும் கேட்டால் ரொம்ப கஷ்டங்க”என்று முதல்வரே சொல்லியிருக்கிறார். இதன் பிறகுதான் ராமதாஸே கேட்டதற்காக 22 இல் இருந்து ஒன்று கூட்டி 23 சீட்டுகள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது,

திட்டமிட்டபடியே 10.5% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட பிறகு பாமகவுடனான தொகுதிப் பங்கீடும் உடன்பாடு ஏற்பட்டது.

பாமக நிறுவனர் ராமதாஸின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்காக உலகம் முழுவதிலுமிருந்தும் பலர் தன்னை தொடர்புகொண்டு வாழ்த்துவதாக பதிவுகளை இட்டு வருகிறார்.

அந்தப் பதிவுகளுக்கான பின்னூட்டங்களில் ஏராளமானோர் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் ராமதாஸுக்கு தெரிவித்து வருகிறார்கள். ஒரு சிலர் மாறான கருத்துகளையும் பதிந்துள்ளனர். எல்லா கருத்துகளையும் தனது உதவியாளர் மூலம் படித்துக் கேட்டு வருகிறார் ராமதாஸ்.

“சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களே நீங்கள் பெற்றுத் தந்திருக்கின்ற இந்த இட ஒதுக்கீடு இன்னொரு சுதந்திரத்திற்கு ஈடானது தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய வன்னிய சமூகம் உங்களை ஒரு நாளும் மறக்காது காரணம் நீங்கள் கடந்து வந்த பாதை கரடுமுரடானது அந்த வழிகளை தாங்கிக்கொண்டு 40 ஆண்டு காலமாக போராடி பெற்றுத் தந்துள்ள இந்த 10 .05% சதவிகித இட ஒதுக்கீடு எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை இதுவரை இந்த மக்களை வஞ்சித்து அரசுகளை எதிர்த்து போராடி கல்வியிலும் வேலையிலும் உரிய பங்கீடு வேண்டும் என்று கேட்டு வாங்கித் தந்து உள்ளீர் நீங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின் திருவுருவம் நீங்கள். நெஞ்சம் எல்லாம் நிறைந்து உள்ளேன் வாழ்க ஐயா வணங்குகிறேன் ஐயா” என்று சக்திவேல் தேவராஜ் என்பவர் கருத்திட்டுள்ளார்.

மேலும், கிரேட் பென்னி ஜான் என்பவர், “ ஐயா ராமதாஸ் அவர்களின் அரசியல் வேட்டையை தெளிவாக செய்கிறீர்கள். இந்த மசோதா வெறும் கண் துடைப்பு, தற்காலிகமானது என்று குறிப்பிட்டிருக்கிறது. நீங்கள் உங்களை மேம்படுத்தி கொள்ள தான் இந்த அரசியல் செய்கிறீர்கள். என்பது மக்கள் நன்கு அறிவார்கள் உங்கள் சுயநலத்திற்காக வன்னியர் சமூகத்தை பகடை காயாக பயன்படுத்துகிறீர்கள், இந்த இட ஒதுக்கீடு கிடைத்தது நிலைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான் ஆனால் இது அரசியல் நாடகம் என்பது நாடறியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வன்னியர் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹசன் டாக்டர் ராமதாசின் பதிவில் இட்டுள்ள பின்னூட்டத்தில், “உண்மையில் ஒரு இனத்திற்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியை போராடி உள்ளீர்கள் 40 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம்தான் ,இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு வெற்றி. எங்கள் சமுதாயத்தில் உங்களைப் போன்ற ஒரு தலைவர் இல்லையே என்ற வருத்தம் எங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள் ஐயா” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல் ஏராளமானவர்கள் பாமக நிறுவனர் ராமதாஸின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share