xதேர்தல் விவாதம்: எதிலிருந்து பிரியும் ஓட்டு?

Published On:

| By Balaji

ராஜன் குறை

தமிழ் தொலைகாட்சிகளில் நடத்தப்படும் விவாதங்கள், நேர்காணல்கள், செய்திகள் ஆகியவற்றை கூடியவரை பார்த்து வருகிறேன். இதில் ஒரு கேள்வி தொடர்ந்து எழுப்பப் படுகிறது. அது என்னவென்றால் அ.ம.மு.க கூட்டணி, மக்கள் நீதி மைய கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்றும் யார் ஓட்டுகளை அல்லது எந்த ஓட்டுக்களை பிரிப்பார்கள் என்ற கேள்வியாகும். அரசின் மீதான அதிருப்தி வாக்குகளை பிரிப்பார்களா அல்லது தி.மு.க-விற்கு எதிரான வாக்குகளை பிரிப்பார்களா என்பது அதன் முழு பொருள். இந்த மூன்று அணிகள்/கட்சி போட்டியிடுவது தி.மு.க-விற்கு சாதகமா, அ.இ.அ.தி.மு.க-விற்கு சாதகமா என்பது உட்பொருள். இந்த கேள்வியை எந்த அடிப்படையில் விவாதிப்பது என்பதில் ஒரு தெளிவு இல்லை. சமூக ஊடகங்களிலும் பலரும் பலவிதமாக எழுதுகிறார்கள். இது அவருடைய B டீம், இவருடைய B டீம் என்பது போன்ற பக்குவமற்ற வாதங்கள் வருகின்றன.

இந்த கேள்வியை சரியானபடி அணுகவேண்டும் என்றால் பிரிக்கப்படுவது எது என்பதை நாம் சரிவர யோசிக்கவேண்டும். உதாரணமாக ஒரு பெருந்தனவந்தர் இறந்துவிட்டார். அவர் சொத்துக்களை அவர் பிள்ளைகளுக்கு பிரித்து தரவேண்டும் என்றால் பிரச்சினை தெளிவாக இருக்கிறது. அவர் உயிலே எழுதி வைக்காவிட்டாலும் அவர் சொத்துக்களின் பட்டியலை வைத்துக்கொண்டு பஞ்சாயத்து பேசி ஒருவகையாக பிரித்து விடலாம். சில அசையா சொத்துக்களை விற்று ரொக்கத்தை பிரித்துவிடலாம். ஆனால் இந்த ஓட்டு பிரிக்கும் பிரச்சினையில் எதை பிரிப்பார்கள் என்று வரையறுப்பதில் குழப்பம் இருக்கிறது. பிரிப்பதாக கூறும் விஷயத்தின் அளவு என்ன என்பது திட்டவட்டமாக இல்லை. ஆட்சியின் மீதான அதிருப்தி ஓட்டுகள் (anti-incumbency) என்றால் அது எவ்வளவு என்று தெரியாது. முப்பது சதவீத வாக்காளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று கொள்வதா, அறுபது சதவீத வாக்காளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று கொள்வதா, எந்த அடிப்படையில் அதை கணக்கிடுவது என்று தெரிந்தால்தான் இவர்கள் அதை பிரிப்பார்களா, பிரித்தால் என்ன விளைவு என்று யோசிக்க முடியும். அதேபோல, தி.மு.க-விற்கு எதிரான ஓட்டுகளை பிரிப்பார்கள் என்றால் தி.மு.க-விற்கு எதிரான ஓட்டுக்கள் என்பவை எவ்வளவு சதவீதம் என்பதை முடிவு செய்யவேண்டும். தி.மு.க என்னும்போது தி.மு.க அணி என்பதால் அந்த அணிக்கு எதிர்ப்பான ஓட்டுகள் இந்த தேர்தலில் நாற்பது சதவீதமா, ஐம்பது சதவீதமா என்று தெரிந்தால்தான் இவர்கள் எவ்வளவு பிரிப்பார்கள் அதனால் என்ன பாதிப்பு என்பதை கணக்கிட முடியும். இதை நாம் யூகிக்க இருதுருவ அரசியல் என்பது தமிழகத்தில் எப்படி செயல்பட்டுள்ளது என்பதை காணவேண்டும்.

**இரு துருவ அரசியல் **

திராவிட முன்னேற்ற கழகம் 1971 தேர்தலில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றது. அதன் பிறகு அ.இ.அ.தி.மு.க அந்த கட்சியை உடைத்து உருவான பிறகு அந்த ஓட்டுக்களை இரு கட்சிகளும் பிரித்துக்கொண்டதுடன் கூடுதலாக ஓட்டுக்களை ஈர்க்கத் துவங்கினார்கள். ஒரு கட்சியின் வாக்கு வங்கி என்று நாம் குறிப்பிடுவது என்ன ஆனாலும் சரி, நான் அந்த கட்சிக்குத்தான் போடுவேன் என்று உறுதியாக உள்ள ஒரு வாக்காளரை. அப்படியானவர்களைத்தான் வாக்கு வங்கி என்று சொல்லமுடியும். அப்படிப்பட்ட வாக்கு வங்கியை நாம் கணக்கிடுவது கடினம். ஏனெனில் தேர்தல் தினத்தன்று பல்வேறு காரணங்களால் ஒருவர் வாக்களிக்க நேரிடும். வேட்பாளர், உள்ளூர் பிரச்சினை, சமூக அடையாளம், தனிப்பட்ட பாதிப்புகள் என பல கணக்குகள் உருவாகலாம். அதனால் யார் உண்மையிலேயே வாக்கு வங்கி என்று கூறமுடியாது. ஆனால் முற்றிலும் எதிர்மறையான சூழலிலும் ஒரு கட்சியால் எவ்வளவு வாக்குகளை ஈர்க்க முடியும் என்பதை புள்ளி விவரத்திலிருந்து காணலாம். 1977 முதல் இதுவரை பத்து தேர்தல்களில் தி.மு.க-வும், அ.இ.அ.தி.மு.க-வும் மோதி உள்ளன. இந்த ஒவ்வொரு தேர்தலையும் எத்தனையோ பிரச்சினைகள், வரலாற்று நிகழ்வுகள், போக்குகள் தீர்மானித்தன. அதையெல்லாம் ஆராய விரிவான நூல்தான் எழுதவேண்டும். ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் தான் ஆட்சி அமைக்குமளவு கணிசமான வாக்குகளை ஈர்க்கமுடியும் என்பது அரை நூற்றாண்டு வரலாறு எனலாம்.

இதுவரை நடந்த தேர்தல்களை நாம் ஆராய்ந்தால் தி.மு.க-வின் குறைந்தபட்ச வாக்குகளை ஈர்க்கும் திறன் வெளிப்பட்ட ஆண்டு 1991. அந்த தேர்தலின் பிரசாரத்தின் போது அ.இ.அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் மனித வெடிகுண்டால் கொலையுண்டார். அந்த சம்பவம் கடும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. அதனால் காங்கிரஸ்-அ.இ.அ.தி.மு.க மீதான மிகப்பெரிய அனுதாப அலையும், தி.மு.க மீதான எதிர்ப்பலையும் வீசியது. காரணம் தி.மு.க ஈழத்தமிழர் குழுக்களுக்கு ஆதரவான கட்சி என்ற எண்ணம்தான். அந்த காரணத்திற்காகத்தான் அதன் ஆட்சி ஏற்கனவே கலைக்கப்பட்டிருந்தது. அந்த தேர்தலில் தி.மு.க மாநில அளவில் பதிவான ஓட்டுகளில் 22% மட்டுமே பெற்றது. அது போட்டியிட்ட தொகுதிகளில் 30% வாக்குகளையே ஈர்த்தது. எனவே தி.மு.க-வின் குறைந்த பட்ச வாக்கு ஈர்க்கும் திறன் என 22% – 30% எனக்கொள்ளலாம். அந்த தேர்தலில் அதிக பட்ச வாக்குகளை அ.இ.அ.தி.மு.க ஈர்த்தது. தமிழக அளவில் பதிவான வாக்குகளில் 44%, அது போட்டியிட்ட தொகுதிகளில் 61% வாக்குகளையும் அது ஈர்த்தது.

அதற்கு அடுத்த 1996 தேர்தலில் நிலை தலைகீழானது. ஐந்தாண்டுகால ஜெயலலிதாவின் ஆட்சி மிகப்பெரிய அதிருப்தி அலையை உருவாக்கியது. ராஜீவ் காந்தியின் மரணத்தால் பெற்ற ஆதரவை முற்றிலும் இழந்தார் ஜெயலலிதா. மாநில அளவில் மொத்த வாக்குகளில் 21% மட்டுமே அந்த கட்சியால் ஈர்க்க முடிந்தது. அது போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் கணக்கிட்டால் 30% வாக்குகளையே பெற்றது. இதுவே பத்து தேர்தல்களில் அதன் குறைந்தபட்ச வாக்கு சேகரிப்பாகும். எனவே அ.இ.அ.தி.மு.க-வின் குறைந்தபட்ச வாக்கு ஈர்க்கும் திறன் 21% – 30% எனலாம். அந்த தேர்தலில்தான் தி.மு.க அதிகபட்ச வாக்குகளை ஈர்த்துள்ளது. மாநில அளவில் 44% வாக்குகளையும், அது போட்டியிட்ட தொகுதிகளில் 54% வாக்குகளை ஈர்த்தது.

இதன் பொருள் என்னவென்றால் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் குறைந்தபட்சமாக 20% வாக்குகளை ஈர்க்கும். அப்போது இரண்டும் சேர்ந்து உத்திரவாதமாக 40% வாக்குகளை ஈர்க்கும். இன்னொரு 40% வாக்குகள் நகரும் வாக்குகள் அல்லது மிதக்கும் வாக்குகள். இதை இரண்டு கட்சிகளுமே ஈர்க்கும். எந்த கட்சி அதிகம் ஈர்க்கிறதோ அது வெற்றியடையும். அலைவீசும் தேர்தலில் இந்த நகரும் வாக்குகளில் 35% முதல் 40% சதவீதம் வரை ஒரு கட்சி ஈர்த்துவிடும் என்பதை மேலே சொன்ன உதாரணங்களில் கண்டோம். மற்ற தேர்தல்களில் ஒரு கட்சி (22% + 20% = 42%) மற்றொரு கட்சி (18%+20%=38%) என்றால் அதற்கேற்றார்போல பெரும்பான்மை அமையும். இந்த ஈர்க்கும் சக்தி உருவாவதில் கூட்டணி ரசாயனம், கணிதம், அந்தந்த தேர்தலை நிர்ணயிக்கும் பிரச்சினைகள் போன்றவை அடங்கும்.

இரண்டு கட்சிகளும் சேர்ந்து அதிகபட்சம் ஈர்க்கும் 80% வாக்குகளை கடந்து 20% வாக்குகள் எப்போதுமே பிறருக்கு போகக் கூடியதாக இருக்கிறது. விஜய்காந்த் முதலில் பங்கெடுத்த 2006 தேர்தலில் அவருக்கு 8% வாக்குகள் கிடைத்தது இப்படித்தான். கடந்த 2016 தேர்தலிலும் மக்கள் நலக் கூட்டணியின் அனைத்துக் கட்சிகளின் வாக்குகளை சேர்த்தால் 7% வரும். இரண்டு கட்சிகளும் தலைமை தாங்கும் கூட்டணிகளைத் தவிர பிற கட்சிகளுக்கு என ஒரு 20% மிதக்கும் ஓட்டுகள் அல்லது நகரும் ஓட்டுகள் உள்ளன. இதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

**சென்ற 2016 தேர்தலின் வித்தியாசமான முடிவு**

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அணி, அ.இ.அ.தி.மு.க இரண்டுமே சம அளவு வாக்குகளை ஈர்த்தன. அண்ணா தி.மு.க முதல் முறையாக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அதுவும் முந்தைய பாராளுமன்ற தேர்தலில் ‘மோடியா? லேடியா?’ என்று ஜெயலலிதா சவால் விட்டிருந்ததும் மொத்த வாக்குகளில் 40.77% கிடைக்க காரணமாயிருந்தது. காங்கிரஸ், பிற கூட்டணி கட்சிகளை சேர்த்தால் தி.மு.க-வும் கிட்டத்தட்ட அதே அளவு வாக்குகளை பெற்றது. தி.மு.க தான் மட்டும் போட்டியிட்ட தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க-வை சற்றே அதிகமாக 41.06% வாக்குகளை பெற்றிருந்தது. இருப்பினும் காங்கிரஸ் 36.46% மட்டுமே அது போட்டியிட்ட 41 தொகுதிகளில் பெற்று 33 தொகுதிகளில் தோற்றதால், தி.மு.க 88 தொகுதிகளும், அ.இ.அ.தி.மு.க 135 தொகுதிகளும் பெற்று அ.இ.அ.தி.மு.க ஆட்சி அமைத்தது. இது போல இரண்டு கட்சிகளும் சமபலமாக, இரண்டு பக்கமும் மற்றவரைவிட அதிக வாக்குகளை ஈர்க்க முடியாது போனது இதுவே முதல் முறை. அப்போதும் இரண்டு பக்கமும் சேர்த்து பெற்ற 80% வாக்குகளுக்கு வெளியே 20% வாக்குகள் இருந்தன. மக்கள் நலக் கூட்டணி 7% பெற்றாலும் மற்ற வாக்குகள் என்னவாயின? பாட்டாளி மக்கள் கட்சி ஐந்து சதவீதம், நாம் தமிழர் கட்சி ஒரு சதவீதம் வாக்குகளை பெற்றன. அதற்குமேல் மற்ற வாக்குகள்?

தேர்தலில் மொத்தம் 90 கட்சிகள் அல்லது அமைப்புகள் போட்டியிட்டதாக தேர்தல் ஆணைய வலைத்தளம் காண்பிக்கிறது. இது தவிர சுயேச்சைகள் (1.4%)மற்றும் நோட்டா (1.2%). ஜம்மு & காஷ்மீர் நாஷனல் பாந்தெர்ஸ் பார்ட்டி என்ற அமைப்பு இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது; மொத்தம் 227 வாக்குகளை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து சதம் வாக்குகள் இப்படி சிறிய கட்சிகள், அமைப்புகளுக்கு சிதறியுள்ளன எனலாம்.

**எதிர்வரும் தேர்தலில் அலை வீசுமா? **

பொதுவாக அதிருப்தி வாக்கு எனப்படும், ஆங்கிலத்தில் ஆண்டி- இன்கம்பன்சி (anti-incumbency) என்று கூறப்படும் வாக்குகள் மாற்றத்திற்கான வாக்குகள். மக்கள் தங்கள் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று உணர்வதால், வளர்ச்சியின் பயன்கள் அவர்களை சென்று அடைவதில்லை என்று நினைப்பதால் அவர்களது ஒரே ஆயுதமான வாக்குகளை பயன்படுத்தி ஆட்சியை மாற்றுகிறார்கள். இரண்டு கட்சிகளும் மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் போதுதான் தங்கள் கோரிக்கைகள் கவனிக்கப்படும் என நினைக்கிறார்கள். அந்த வகையில் 1991 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை மாற்றி வந்தார்கள். கடந்த 2016 தேர்தலில்தான் இது சிறிய வாக்கு சதவீதத்தில் தவறி விட்டது. அதனால் இந்த முறை அவசியம் மாற்றித்தான் ஆகவேண்டும் என்பதே இதுவரையிலான போக்கிலிருந்து நாம் காணக்கூடியது. கூடுதலாக வாக்குகளை தி.மு.க அலைபோல ஈர்க்க என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்பதையும் காண வேண்டும்.

தி.மு.க தலைமையில் தொடர்ச்சி இருக்கிறது. கலைஞரின் தொடர்ச்சியாகவும், கொள்கைகளின் தொடர்ச்சியாகவும் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அ.இ.அ.தி.மு.க தலைமையில் தொடர்ச்சி இல்லை. பாஜக-விடமிருந்து முரண்பட்டு இருந்த ஜெயலலிதாவின் கொள்கையிலும் தொடர்ச்சி இல்லை. பழனிசாமி, பாஜக-வின் வற்புறுத்தலுக்கு பணிந்து ஓ.பி.எஸ்-எஸை துணை முதல்வராக, கட்சி ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக்கொண்டு சுயேச்சையாக செயல்பட முடியாமல் இருக்கிறார். நடுவண் அரசை ஆளும் பாஜக-வின் பிடியில் அ.இ.அ.தி.மு.க இருக்கிறது என்ற வாதம் பெருமளவு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் இந்த பாஜக உறவை பாராளுமன்ற தேர்தலில் கடுமையாக புறக்கணித்தார்கள். தி.மு.க கூட்டணி 50% வாக்குகளுக்கு மேல் பெற்று ஒரு அலையாக மொத்தம் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வென்றது. அதே பாஜக, அ.இ.அ.தி.மு.க கூட்டணிதான் இப்போதும் தொடர்கிறது. பாஜக-வின் பினாமி அரசு, அடிமை அரசு என்றே அ.இ.அ.தி.மு.க கருதப்படுகிறது. அதை நிரூபிப்பதுபோல தன் பதவியின் மாண்பை குறைக்கும் வகையில் முதலமைச்சரே விமான நிலையம் சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்கிறார்.

பாஜக-வின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளால் தொழில்களும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி ஏற்றம் கடுமையாக உள்ளது. பெட்ரோல், காஸ் விலையேற்றம் கடுமையாக உள்ளது. சி.ஏ.ஏ போன்ற விபரீத சட்டங்களால் சிறுபான்மையினர், முற்போக்காளர்கள் பாஜக-விற்கு எதிராக திரண்டுள்ளனர்.

நீட் தேர்வு, ஜிஎஸ்டி வரியில் பங்கு, புயல் நிவாரணம், எழுவர் விடுதலை ஆகிய பல்வேறு விஷயங்களில் அ.இ.அ.தி.மு.க அரசால் பாரதீய ஜனதா அரசிடமிருந்து எந்த அனுசரணையான முடிவையும் பெறமுடியவில்லை. விஷயம் தெரிந்த மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

வேலை வாய்ப்புகளில் வடநாட்டவரை நுழைப்பது, இந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றை திணிப்பது என பல தமிழக நலன்களுக்கு எதிரான செயல்களை பாஜக செய்கிறது. உள்ளபடியே பட்டியல் மிகவும் பெரியது. இவை தொடர்ந்து ஊடகங்களில், சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றன.

அ.இ.அ.தி.மு.க கட்சிக்குள் ஒற்றுமையில்லை. ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணி பிரச்சினைகள் தவிர, தலமட்டத்திலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிர்ப்பு, போட்டி வேட்பாளர்கள் என்று கட்டுக்கோப்பின்றி விளங்குகிறது.

அ.ம.மு.க அணி, சசிகலா-தினகரனை வெளியேற்றிய பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டுமென்றே களம் இறங்கியுள்ளது. இது அ.இ.அ.தி.மு.க வாக்குகளை பெருவாரியான தொகுதிகளில் நிச்சயம் பிரிக்கும்.

கடைசி நிமிடத்தில் அவசரத்தில் அள்ளித்தெளித்த கோலமாக வன்னியருக்கு 10.5% உள் இட ஒதுக்கீட்டினை அளித்தது பிற ஜாதியனரை, குறிப்பாக முக்குலத்தோரை வெகுவாக அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.

மேற்கண்ட காரணங்களால் தி.மு.க அணி மீண்டும் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான வாக்கை ஈர்க்குமானால் கமலஹாசனோ, சீமானோ பெறக்கூடிய ஐந்து, பத்து சதவீத வாக்குகள் ஏற்கனவே பிறருக்காக விழக்கூடிய 20% வாக்குகளை தாண்டி ஈர்ப்பு ஓட்டுகளை பிரித்துவிட முடியாது.

ஆனால் வேண்டுமென்றே அப்படி ஒரு தி.மு.க-வை நோக்கிய ஈர்ப்போ, அலையோ இருக்காது எனவும், அதனால் கமல்ஹாசனோ, சீமானோ வாக்குகளை பிரிப்பார்கள் எனவும் ஒரு போலியான கதையாடலை ஊடகங்கள் கட்டமைக்கின்றன. இது இந்த தேர்தலின் கதையாடலை திசைதிருப்பும் உத்தி என்பது மட்டுமின்றி, உண்மையான பிரச்சினைகளை பேச மறுப்பதும் ஆகும். ஐநூற்றுக்கும் மேற்பட்ட பொது வாக்குறுதிகளை அளித்துள்ள, அதைத்தவிர தொகுதிவாரியான வாக்குறுதிகளை அளித்துள்ள தி.மு.க தேர்தல் அறிக்கையில் பேச எவ்வளவோ அம்சங்கள் இருந்தாலும், அ.இ.அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வை நோக்கி நிகழம் வாக்குகளின் நகர்வை (VOTE MIGRATION) பேசுவதை தவிர்க்கவே ஊடகங்கள் விரும்புகின்றன. அதனால் சீமான், கமல ஹாசன் ஆகியோருக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகின்றன. ஆனால் மக்களிடையே ஒரு கதையாடல் உருவாகிவிட்டது என்றே தோன்றுகிறது. “ஸ்டாலின்தான் வாராறு, விடியல் தரப்போறாரு” என்பதே அது.

**கட்டுரையாளர் குறிப்பு:**

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share