இல்லத்தரசிகளுக்கு ஊதியமா? கமல்ஹாசனுக்கு நடிகை எதிர்ப்பு!

Published On:

| By Balaji

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவோம் என்ற கமல்ஹாசனின் வாக்குறுதிக்கு நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது பல்வேறு வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டம், வீடு தேடி வரும் அரசு சேவை, வீடுகளை மின்னணு வீடுகளாக மாற்றுவது உள்ளிட்ட 7 அம்சத் திட்டங்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

இதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், கமல்ஹாசனின் யோசனையை வரவேற்கிறோம், இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர ஊதியத்தை மாநில அரசு செலுத்துவதன் மூலம், சமூகத்தில் அவர்களின் சேவை பணமாகவும் அங்கீகரிக்கப்படுகிறது. இது அவர்களின் சக்தி மற்றும் தனித்தன்மையை மேம்படுத்துவதோடு அடிப்படை வருமானத்தை உருவாக்கும் என தனது ட்விட்டரில் குறிப்பிட்டார்.

ஆனால் இதற்கு பதிலளித்துள்ள இந்தி நடிகை கங்கனா ரனாவத், “எங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைவதற்கு ஒரு விலையை நிர்ணயிக்க வேண்டாம். எங்களுக்கு சொந்தமானவர்களை தாயைப் போல கவனித்துக்கொள்ள சம்பளம் தர வேண்டாம். வீடு என்னும் சிறிய மாளிகையில் அரசியாக இருப்பவருக்கு ஊதியம் தேவையில்லை. அனைத்தையும் வியாபாரமாகப் பார்க்காதீர்கள். பெண்ணிடம் உங்களை ஒப்படைத்து விடுங்கள். உங்களிடம் அன்பையும் மரியாதையையும் தான் எதிர்பார்க்கிறோம், ஊதியத்தை அல்ல” என்றார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share