இன்று மாலை 5 மணிக்குள்… பஞ்சாப் டிஜிபிக்கு நோட்டீஸ்!

Published On:

| By Balaji

ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாபில் மேம்பாலத்தில் பிரதமர் 15-20 நிமிடங்கள் சிக்கித் தவித்த பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்க அம்மாநில அரசு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்த நிலையில்…. ஒன்றிய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் டிஜிபி சித்தார்த் சட்டோபாத்யாயாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“சிறப்பு பாதுகாப்புக் குழு சட்டத்தின் கீழ் டிஜிபிக்கு விதிக்கப்பட்ட சட்டப்பூர்வக் கடமைகளை நீங்கள் மீறியுள்ளீர்கள் என்பதற்கு முதல் கட்ட முகாந்திரம் தெளிவாகத் தெரிகிறது. இந்த நிலையில் உங்கள் மீது அகில இந்திய சேவை சட்டப்படி(ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கானது) ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

இதற்கான பதிலை ஜனவரி 8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உள்துறை அமைச்சகத்துக்கு நீங்கள் அனுப்ப வேண்டும். இல்லையென்றால், நீங்கள் எந்த பதிலையும் கூறவில்லை என்று கருதி உங்கள் மீது ஒழு��்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஜனவரி 6ஆம் தேதி உள்துறையின் துணைச் செயலாளர் அர்ச்சனா வர்மா கையெழுத்திட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதேபோன்ற நோட்டீஸ்கள் பதிண்டா எஸ்.எஸ்.பி, ஃபெரோஸ்பூர் எஸ்.எஸ்.பி.ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவர்களுக்கான நோட்டீஸில், “பிரதமரின் வாகனத்துக்கு நூறு மீட்டர் முன்பு போராட்டக் காரர்கள் திரண்டிருக்கிறார்கள். இதனால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமரின் கான்வாய் ஸ்தம்பித்து நிற்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டிய மிகக் கொடுமையான பாதுகாப்பு விதிமீறல்.

இதுவரை எங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி அந்த போராட்ட இடத்தில் பஞ்சாப் போலீஸார் செயலற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். பிரதமரின் வழித் தடம் முழுதும் மிகக் குறைவான போலீஸாரே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்” என்று உள்துறை துணைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே பஞ்சாப் பிரதமர் பயண பாதுகாப்பு மீறல் பற்றி விசாரிக்க பஞ்சாப் மாநில அரசு, மத்திய அரசு ஆகியவை அமைத்த இரு விசாரணை ஆணையங்களும் ஜனவரி 10 ஆம் தேதி வரை தங்கள் செயல்களைத் தொடங்கக் கூடாது என்று நேற்று (ஜனவரி 7) உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபோதும்… மத்திய விசாரணைக் குழுவினர் தங்கள் செயல்பாடுகளைத் துவங்கிவிட்டனர்.

பிரதமரின் கான்வாய் நின்ற இடத்தை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டனர். முன்னதாக பஞ்சாப் டிஜிபி உள்ளிட்ட 13 அதிகாரிகளை ஃபெரோஸ்பூருக்கு வரவழைத்தது அந்த குழு.

இதற்கிடையே பஞ்சாப் பிரதமர் கான்வாய் ஸ்தம்பிப்பு தொடர்பாக அடையாளம் தெரியாத போராட்டக் காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share